/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.50 கோடி மோசடி புகார் மளிகை கடைக்காரர் ஓட்டம்
/
ரூ.50 கோடி மோசடி புகார் மளிகை கடைக்காரர் ஓட்டம்
ADDED : ஏப் 10, 2025 05:02 AM
பல்லாரி: பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக, பொது மக்களிடம் பணம் வசூலித்து கொண்டு தப்பியோடிய மளிகை கடைக்காரரை போலீசார் தேடுகின்றனர்.
பல்லாரி நகரில் வசிக்கும் விஸ்வநாத், 45, மளிகைக்கடை நடத்தி வந்தார். இவர், தன்னிடம் பொருட்கள் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவித்தார். 5,000 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கினால், 2,000 ரூபாய் சமையல் எண்ணெய் இலவசமாக கொடுத்து, மக்களின் நம்பிக்கையை பெற்றார்.
'தன்னிடம் 15,000 ரூபாய் கொடுத்தால், ஒரே மாதத்தில் 20,000 ரூபாய் கிடைக்கும்' என, ஆசை காட்டினார். 'ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால், நான்கு சதவீதம் வட்டி கிடைக்கும்' என்றார்.
அது மட்டுமின்றி, தன் கடையில் இரண்டு மாதங்களுக்கான மளிகை பொருட்கள் வாங்கினால், ஒரு மாதம் இலவசமாக பொருட்கள் கிடைக்கும் என, பலவாறாக ஆசை வார்த்தை கூறினார்.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, பலரும் லட்சக்கணக்கான ரூபாய் கொடுத்தனர். பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும், வட்டி கிடைக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. ஏதேதோ காரணம் கூறி, விஸ்வநாத் மழுப்பினார். இவரது மோசடியை புரிந்து கொண்ட மக்கள், புரூஸ்பேட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தன் மீது புகார் பதிவானதும், இரவோடு, இரவாக வீட்டை பூட்டிக் கொண்டு விஸ்வநாத், தன் குடும்பத்துடன் தப்பிவிட்டார். இதையறிந்த மக்கள், நேற்று முன் தினம், புரூஸ்பேட் போலீஸ் நிலையத்தின் முன் குவிந்தனர்.
பொது மக்களிடம் விஸ்வநாத் 50 கோடி ரூபாயை சுருட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவரை கண்டுபிடித்து, பணத்தை மீட்டுத் தரும்படி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

