கள்ளக்காதலியை கொன்று துாக்கில் தொங்க விட்டவர் கைது
கள்ளக்காதலியை கொன்று துாக்கில் தொங்க விட்டவர் கைது
ADDED : செப் 19, 2026 02:27 AM

பரப்பனஅக்ரஹாரா: திருமணத்திற்கு வற்புறுத்திய கள்ளக்காதலி யின் கழுத்தை நெரித்து கொன்று, உடலை துாக்கில் தொங்க விட்டவர், 19 நாட்களுக்கு பின், கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் முன்னா தாஸ், 32. இவர், பெங்களூரு நாகநாதபுராவில் வாடகை வீட்டில் ஒரு பெண்ணுடன் வசித்தார். பக்கத்து வீட்டினரிடம், அப்பெண்ணை, தனது மனைவி என்று கூறியிருந்தார். கடந்த மாதம் 30 ம் தேதி அந்த பெண் வீட்டில் துாக்கில் தொங்கினார். முன்னா தாஸ் தலைமறைவாகி விட்டார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், அந்த பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்று, பின், உடலை துாக்கில் தொங்க விட்டது தெரிந்தது. முன்னா தாசை போலீசார் தேடி வந்த நிலையில், 19 நாட்களுக்கு பின், பெங்களூரின் ராயசந்திராவில் நேற்று கைது செய்யப்பட்டார்.
கொலையான பெண்ணின் பெயர் சம்புதாஸ், 24. அசாமில் முன்னா தாஸ் பக்கத்து வீட்டில் வசித்தார். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். பக்கத்து வீடு என்பதால் இருவரும் அடிக்கடி பேசி பழகினர். இது, கள்ளக்காதலாக மாறியது.
கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி, அசாமில் இருந்து சம்புதாஸை, முன்னா தாஸ் பெங்களூரு அழைத்து வந்தார். திருமணம் செய்வதாகவும் கூறினார். ஆனால் பல காரணங்களை கூறி திருமணத்தை தள்ளி போட்டார். அசாமில் உள்ள மனைவியிடம் தினமும் முன்னா தாஸ் பேசினார். இது, சம்பு தாஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
தன்னை உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதால், கோபத்தில் சம்பு தாஸை, முன்னா தாஸ் கொலை செய்து, உடலை துாக்கில் தொங்கவிட்டு, தற்கொலை என்று நாடகமாடியது விசாரணையில் தெரிந்தது.
