/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ.,வுக்கு எதிரான விளம்பர வழக்கு ராகுல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
/
பா.ஜ.,வுக்கு எதிரான விளம்பர வழக்கு ராகுல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பா.ஜ.,வுக்கு எதிரான விளம்பர வழக்கு ராகுல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பா.ஜ.,வுக்கு எதிரான விளம்பர வழக்கு ராகுல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
ADDED : டிச 06, 2025 05:31 AM

பெங்களூரு: பா.ஜ.,வுக்கு எதிரான விளம்பர வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மனு மீதான விசாரணையை, கர்நாடகா உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கர்நாடகாவில் முந்தைய பா.ஜ., ஆட்சியின் போது, முதல்வர் பதவிக்கு 2,500 கோடி ரூபாயும்; அமைச்சர் பதவிக்கு, 500 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டதாக, பத்திரிகைகளில் காங்கிரஸ் கட்சி விளம்பரம் செய்தது. இந்த விளம்பரத்தை காங்கிரஸ் தலைவர்கள் தங்களது, 'எக்ஸ்' பக்கத்திலும் பதிவிட்டு இருந்தனர்.
இந்தச் செயல் தங்கள் கட்சியை களங்கப்படுத்துவதாக பா.ஜ., பொதுச்செயலர் கேசவ் பிரசாத் அளித்த புகாரில், தற்போதைய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மீது, ஹைகிரவுண்ட் போலீஸ் நிலையத்தில் அவதுாறு வழக்கு பதிவானது. கடந்த ஆண்டு ஜூனில், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ராகுல் விசாரணைக்கு ஆஜரானார். அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ராகுல் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி சுனில் தத் யாதவ் விசாரிக்கிறார். நேற்று முன்தினம் மனு மீதான விசாரணை நடந்தது.
அப்போது, ராகுல் சார்பில் ஆஜரான, கர்நாடக அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி, ''கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி, பத்திரிகைகளுக்கு கொடுத்த விளம்பரத்தை மனுதாரர் ரீ டுவிட் மட்டுமே செய்திருந்தார். இவ்வழக்கில், அவருக்கு வேறு எந்த பங்கும் இல்லை. விளம்பரத்தை வெளியிட்ட பத்திரிகைகளை பிரதிவாதிகளாக சேர்க்கவில்லை. விளம்பரம் வெளியான போது, மனுதாரர் எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அந்த நேரத்தில் எந்த பதவியும் வகிக்கவில்லை. நியாயமற்ற குற்றச்சாட்டை கொண்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார்.
பா.ஜ., சார்பில் ஆஜரான வக்கீல் வினோத் குமார் வாதிடுகையில், ''விளம்பரம் வெளியான நேரத்தில், மனுதாரர் கட்சியின் தலைவராக இருந்தார். ரீ டுவிட் செய்தது அவதுாறு வரம்பில் வரும். தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன் விளம்பரம் கொடுத்து அவதுாறு செய்தனர்,'' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான அடுத்த விசாரணையை, 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

