ADDED : ஜூலை 07, 2026 11:15 PM

மைசூரு: மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளின் உடல் நலனை பரிசோதிக்கும் வகையில், இதய பரிசோதனை நடத்தப்படுகிறது.
நடப்பாண்டு, மைசூரு தசராவின் ஒரு பகுதியாக, குடகு மாவட்டம் பண்டிப்பூர் தாலுகாவில் உள்ள மத்திகோடு, துபாரே, ராம்பூர் யானைகள் முகாமில் உள்ள யானைகளை ஆய்வு செய்ய, கால்நடை மருத்துவ அதிகாரிகள் குழுவினர் சென்றுள்ளனர்.
இம்முகாம்களில் உள்ள, 20க்கும் மேற்பட்ட யானைகளின் உடல் நிலை பரிசோதிக்கப்பட்டது. யானைகளின் ரத்தம், சாணம் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பெண் யானைகளுக்கு, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் மூலம் கர்ப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து, மைசூரு வன விலங்கு துணை பிரிவு துணை வன பாதுகாவலர் டாக்டர் பிரபுகவுடா பிராதர் கூறியதாவது:
தசரா விழாவில் பங்கேற்கும் யானைகள், மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றன.
லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் தங்க அம்பாரியை சுமந்து செல்லும் யானைகளும், அவற்றுடன் செல்லும் மற்ற யானைகளும், இயல்பாகவே மன அழுத்தத்துக்கு ஆளாகின்றன.
யானைகளுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, முதன் முறையாக, இ.சி.ஜி., பரிசோதனை செயல்முறை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இ.சி.ஜி., கருவியை பொருத்தி, அவற்றின் இதய துடிப்பு சோதிக்கப்பட்டது.
பரிசோதனை செய்யப்பட்ட யானைகளின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அறிக்கை கிடைத்த பின், யானைகளின் இதய நிலை தெரியவரும்.
இம்முறை தசராவுக்கான யானைகளை பட்டியலிடும் பணி இன்னும் துவங்கவில்லை. இதற்கு முன், நாங்கள் உடல்நல பரிசோதனைகளை நடத்தி உள்ளோம். இந்தாண்டு தசரா, சற்று தாமதமாக வருவதால் தேர்வு பணியும் தாமதமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
