ADDED : ஆக 05, 2026 01:17 AM

சிக்கமகளூரு: தொடர் மழை காரணமாக, குதிரேமுக் உட்பட முக்கிய சுற்றுலா பகுதியில் மலையேற்றத்துக்கு, வனத்துறை தற்காலிமாக தடை விதித்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்கிறது.
சிக்கமகளூரு மாவட்ட வனத்துறை மூத்த அதிகாரி கூறியதாவது:
சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. குதிரேமுக், பெல்தங்கடி, கெரேகேட் பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள், மலை பாதைகள் வழுக்கும் வகையில் உள்ளன. இது தவிர, வனப்பகுதிக்குள் உள்ள சிறிய ஓடைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணியர் எளிதாக கடக்க கூடிய பாதைகள் அபாயகரமானதாக மாறியுள்ளன. பலத்த காற்று, மழையின் காரணத்தால் மரங்களும், கிளைகளும் முறிந்து விழும் வாய்ப்பு உள்ளது.
சுற்றுலா பயணியரின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் முக்கிய நோக்கம். தற்போதைய வானிலை தகவலின்படி, 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. எனவே, நிலைமை சீராகும் வரை, மலையேற்றத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மலையேற்றம் செய்ய முன்பதிவு செய்த சுற்றுலா பயணியருக்கு, மலையேற்றம் ரத்து செய்யப்பட்டதற்கான குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதே வேளையில், கொடசாத்ரி சபாரி சேவைகள் வழக்கம் போல் தொடரும். இருப்பினும், சுற்றுலா பயணியர் சபாரி செல்வதற்கு முன், வனத்துறையின் அதிகாரபூர்வ இணையதளம் அல்லது உள்ளூர் அலுவலகங்களில் இருந்து பாதைகளின் பாதுகாப்பு குறித்து தகவல் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
