ADDED : ஏப் 28, 2026 04:29 AM

பெங்களூரு: கர்நாடகாவின் பல்வேறு இடங்களில், இடி மின்னலுடன் மழை பெய்ததில் விவசாயி மற்றும் 50 ஆடுகள் உயிரிழந்தன.
கொப்பால் மாவட்டம், குஷ்டகி தாலுகாவின், பெஞ்சமட்டி கிராமத்தில் வசித்தவர் தேவராயனகவுடா போலீஸ் பாட்டீல், 50. இவர் நேற்று மதியம் விவசாய நிலத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். இவ்வேளையில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. எனவே அங்கிருந்த மரத்தடியில் நின்றிருந்தார். அப்போது இடி தாக்கி, அவர் உயிரிழந்தார்.
யாத்கிர் மாவட்டம், குருமிட்கல் தாலுகாவின், போரூரு அருகில், மல்லப்பா, ஜாலப்பா ஆகியோர், நேற்று மதியம் ஆடுகளை மேய்ப்பதற்காக, வனப்பகுதிக்கு சென்றிருந்தனர். அப்போது மழை பெய்ததால், இடி தாக்கி 50 ஆடுகள் உயிரிழந்தன.
கதக் மாவட்டத்திலும், பலத்த மழை பெய்தது. முன்டரகி தாலுகாவின், ஜாக்ருதா சதுக்கம் அருகில், பலத்த காற்றுடன் மழை பெய்ததால், மொபைல் டவர் விழுந்து, பைக்குகள் நொறுங்கின.
அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சாலை நடுவில் மொபைல் டவர் விழுந்ததால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
ஷிவமொக்கா மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்கியது. பத்ராவதியில் காற்றுடன் கூடிய, கன மழை பெய்தது. விவசாயிகளின் பாக்கு தோட்டங்கள் பாழாகி, லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
சாலைகளில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதில் சில வீடுகள் சேதமடைந்தன. வீடுகளின் ஓடுகள், ஷீட்டுகள் காற்றில் பறந்தன. வீட்டில் இருந்த பொருட்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன.
