மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் ஹெலிகாப்டர்கள் ஒப்படைப்பு
மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் ஹெலிகாப்டர்கள் ஒப்படைப்பு
ADDED : செப் 19, 2026 02:30 AM

பெங்களூரு: விமானப்படைக்காக தயாரித்த பயிற்சி விமானங்கள், சிவில் விமான போக்குவரத்து தேவைக்கான நான்கு 'துருவ் நெக்ஸ்ட்' ஹெலிகாப்டர்களை, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ராம்மோகன் நாயுடு முன்னிலையில், விமானப்படை, சிவில் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம், பெங்களூரு ஹெச்.ஏ.எல்., நிறுவனம் நேற்று ஒப்படைத்தது.
பெங்களூரில் உள்ள ஹெச்.ஏ.எல்., எனும், ஹி ந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம், இந்திய விமானப்படைக்காக தயாரித்த, இரண்டு தேஜாஸ் பயிற்சி விமானங்கள்; விமானப்படை விமானிகளின் ஆரம்பகட்ட பயிற்சிக்காக தயாரித்த, எச்.டி.டி., 40 ரகத்தை சேர்ந்த மூன்று விமானங்கள.
சிவில் விமான போக்குவரத்து தேவைகளுக்காக தயாரித்த, நான்கு துருவ் நெக்ஸ்ட் ஹெலிகாப்டர்களை, மத்திய அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, பெங்களூரு ஹெச்.ஏ.எல்., வளாகத்தில் நேற்று நடந்தது.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு முன்னிலையில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்பட்டன. விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங், சிவில் போக்குவரத்து அமைச்சக செயலர் சமீர் குமார் சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ராஜ்நாத் சிங் பேசியதாவது:
இந்தியாவின் விண்வெளி தேவையை பூர்த்தி செய்வதிலும், நாட்டை திறமையானதாகவும், தன்னிறைவு பெற்றதாகவும் மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம். அதிநவீன உபகரகணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால், பாதுகாப்பு துறையில் இந்தியா, தற்சார்பை நோக்கி முன்னேறி வருகிறது. விண்வெளி துறையில் நாம் தற்சார்பு அடைவது காலத்தின் தேவையாக உள்ளது.
விண்வெளி துறை போன்ற சிக்கலான மற்றும் முக்கியமான துறையில் முன்னேற்றம் காண, பெரிய செயல்திட்டங்களின் மைல்கற்களாக நாம் பார்க்க வேண்டும். அடுத்த தலைமுறை உள்நாட்டு விண்வெளி திறன்களை கட்டமைக்க, மேம்படுத்தப்பட்ட பொது மற்றும் தனியார் ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
