/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வால்மீகி ஆணைய முறைகேடு வழக்கு சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தது ஐகோர்ட்
/
வால்மீகி ஆணைய முறைகேடு வழக்கு சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தது ஐகோர்ட்
வால்மீகி ஆணைய முறைகேடு வழக்கு சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தது ஐகோர்ட்
வால்மீகி ஆணைய முறைகேடு வழக்கு சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தது ஐகோர்ட்
ADDED : ஜூலை 02, 2025 06:29 AM
பெங்களூரு : வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைத்து, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரியாக இருந்த சந்திரசேகர், 53, கடந்தாண்டு ஷிவமொக்காவில், தன் இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு, அவர் எழுதிய கடிதத்தில், வால்மீகி மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாயை, தனியார் நபர்களின் கணக்குகளுக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ய, தனக்கு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததை விவரித்திருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த, கர்நாடக அரசு சிறப்பு குழு அமைத்தது. பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரிந்ததால், அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கியது.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் 87 கோடி ரூபாய், லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா, ஆணைய தலைவராக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசனகவுடா தத்தல், பணத்தை தவறாக பயன்படுத்தியது வெளிச்சத்துக்கு வந்தது.
இதனால், நாகேந்திரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.
இதற்கிடையே நாகேந்திராவும், பசவராஜ் தத்தலும் தவறு செய்யவில்லை என, எஸ்.ஐ.டி., அறிக்கை அளித்திருந்தது.
இதுகுறித்து, பெங்களூரு கிழக்கு மண்டல யூனியன் வங்கி டி.ஜி.எம்., மகேஷ், உயர் நீதிமன்றத்தை நாடினார். 'வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், பெருமளவில் முறைகேடு நடந்துள்ளது.
இதில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் நபர்களுக்கு தொடர்புள்ளது. இந்த வழக்கை ஆழமாக விசாரணை நடத்த, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி நாகபிரசன்னா, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைத்து, நேற்று உத்தரவிட்டது. எஸ்.ஐ.டி., விசாரணையை ரத்து செய்தார்.
வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும், சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
வழக்கு சி.பி.ஐ.,க்கு சென்றதால், முன்னாள் அமைச்சர் நாகேந்திரா உட்பட, பலரும் நடுக்கத்தில் உள்ளனர்.