/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக கிரிக்கெட் சங்க தேர்தல்: தடையை நீக்கி ஐகோர்ட் உத்தரவு
/
கர்நாடக கிரிக்கெட் சங்க தேர்தல்: தடையை நீக்கி ஐகோர்ட் உத்தரவு
கர்நாடக கிரிக்கெட் சங்க தேர்தல்: தடையை நீக்கி ஐகோர்ட் உத்தரவு
கர்நாடக கிரிக்கெட் சங்க தேர்தல்: தடையை நீக்கி ஐகோர்ட் உத்தரவு
ADDED : நவ 19, 2025 09:08 AM
பெங்களூரு: கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தேர்தலுக்கு சிட்டி சிவில் நீதிமன்றம் விதித்த தடையை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நவ., 30ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தலைமையில் ஒரு அணியும், முந்தைய நிர்வாக குழு ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையில், கே.எஸ்.சி.ஏ., நிர்வாக கமிட்டி உறுப்பினர் சசிதர், தேர்தலில் போட்டியிடுபவர்களின் தகுதி குறித்து கேள்வி எழுப்பி, சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் தொடர்பாக நடக்கும் கூட்டங்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதிகள் தொடர்பான சில குழப்பங்களை தீர்க்கும்படி, நவ., 5ல் உத்தரவிட்டிருந்தது.
இதனால், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், தேர்தல் அதிகாரியுமான பசவராஜு தேர்தலை டிசம்பருக்கு ஒத்திவைத்தார்.
இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாநில கிரிக்கெட் சங்கத்தினர் மேல்முறையீடு செய்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி பிரதீப் சிங் யெரூர் கூறுகையில், ''பிரதிவாதிக்கு நோட்டீஸ் அனுப்பாததற்கு சரியான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்ற அடிப்படையில், சிட்டி சிவில் நீதிமன்றத்தின் ஒரு தலைபட்ச உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,'' என்றார்.
தேர்தல் அதிகாரி பசவராஜு கூறியதாவது:
கே.எஸ்.சி.ஏ., தேர்தல் நவ., 30ம் தேதி நடக்கவிருந்தது. இருப்பினும், தேர்தல் தொடர்பான முடிவுகளுக்கு சிட்டி சிவில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன் காரணமாக, நீதிமன்ற அவமதிப்பை தடுக்க, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது உயர் நீதிமன்றம், அந்த உத்தரவை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும், நீதிமன்ற உத்தரவு நகலை பார்த்த பின், கே.எஸ்.சி.ஏ., தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

