/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
3வது மனைவியை கொன்ற வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பின் கணவர் கைது
/
3வது மனைவியை கொன்ற வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பின் கணவர் கைது
3வது மனைவியை கொன்ற வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பின் கணவர் கைது
3வது மனைவியை கொன்ற வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பின் கணவர் கைது
ADDED : ஜூன் 27, 2025 11:16 PM

கொப்பால்: மூன்றாவது மனைவியை கொலை செய்து, உடலை கோணிப்பையில் அடைத்து, லக்கேஜ் என்று பஸ்சில் அனுப்பிவிட்டு தப்பிய கணவரை, 23 ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராய்ச்சூர் மாவட்டம், மான்வி தாலுகாவின், ஹாலதாளா கிராமத்தில் வசிப்பவர் ஹனுமந்த ஹுசேனப்பா, 75. இவர், 30 ஆண்டுகளுக்கு முன்பு பாதர்லியின் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில், உதவி அதிகாரியாக பணியாற்றினார். முதல் மனைவி இறந்ததால், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அவரும் கணவருடன் சண்டை போட்டு, பிரிந்து சென்றுவிட்டார். அதன்பின், கொப்பால் நகரின், இந்தரகி கிராமத்தில் வசித்த ரேணுகம்மாவை, மூன்றாவதாக ஹனுமந்த ஹுசேனப்பா திருமணம் செய்து கொண்டார். கங்காவதியின், லட்சுமி கேம்பில் வசித்தனர்.
ரேணுகம்மாவுடனும் ஹனுமந்த ஹுசேனப்பா சரியாக குடும்பம் நடத்தவில்லை. சிறு, சிறு விஷயங்களுக்கும் சண்டை போட்டார்.
கடந்த 2002ல், ஏதோ காரணத்தால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த ஹனுமந்த ஹுசேனப்பா, மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். உடலை கோணிப்பையில் கட்டினார். அதை கங்காவதி பஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
லக்கேஜ் எனக் கூறி, பல்லாரியின் கம்ப்ளிக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏற்றிவிட்டு, அங்கிருந்து தப்பினார். லக்கேஜை ஏற்றியவர் நீண்ட நேரமாக வராததால், பஸ் நடத்துநருக்கு சந்தேகம் ஏற்பட்டது. கோணிப்பையை பிரித்து பார்த்தபோது, பெண்ணின் உடல் இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த நடத்துநர், பஸ்சை கங்காவதி நகர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார். நடந்ததை கூறி புகார் அளித்தார்.
போலீசாரும் கோணிப்பையில் இருந்த சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தினர்.
கோணிப்பையில் இருந்தது ரேணுகா என்பதையும், அவரை ஹனுமந்த ஹுசேனப்பா கொலை செய்ததையும் கண்டுபிடித்தனர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தேடும் முயற்சியை கைவிட்டனர்.
கடந்த 23 ஆண்டுகளாக, நாடோடியாக அலைந்த ஹனுமந்த ஹுசேனப்பா, தனக்கு வயதானதால் சில மாதங்களுக்கு முன்பு, ராய்ச்சூருக்கு திரும்பினார். சிரவாராவின் ஆத்தனுார் கிராமத்தில் வசித்தார். மனைவியை கொலை செய்த வழக்கை போலீசார் மூடியிருப்பர். இனி சிக்கமாட்டோம் எனக்கருதி, சுதந்திரமாக நடமாடினார்.
ஆனால் வழக்கை கைவிடாமல் நிலுவையில் வைத்திருந்த கங்காவதி போலீசாருக்கு, ஹனுமந்த ஹுசேனப்பா மீண்டும் வந்தது தெரிய வந்தது. கங்காவதி டெபுடி எஸ்.பி., சித்தலிங்கே கவுடா, நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மாளி தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன் தினம் ஆத்தனுர் கிராமத்துக்கு சென்று, ஹனுமந்த ஹுசேனப்பாவை கைது செய்தனர்.