/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது
/
மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது
ADDED : நவ 24, 2025 03:39 AM
கோலார்: மனைவியை கொலை நாடகமாடிய கணவர், போலீசாரிடம் சிக்கினார்.
கோலார் நகரின் ஜன்னகட்டா கிராமத்தில் வசிப்பவர் சிவராஜ், 37; ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி காவ்யா, 32. இவர்களுக்கு ஏழு வயதில் மகள் உள்ளார்.
திருமணமான ஆரம்ப நாட்களில், அன்யோன்யமாக இருந்தனர். நாளடைவில் இருவருக்கும் ஒத்து போகாமல், தினமும் சண்டை போட்டு கொண்டனர். பல முறை இரண்டு குடும்பங்களின் பெரியவர்கள், சமாதானம் செய்து வைத்தும் பலன் இல்லை. சமீப நாட்களாக காவ்யா, அவ்வப்போது தாய் வீட்டுக்கு சென்றார். இதனால் கணவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.
ஆண் குழந்தை பிறக்கவில்லை என, தகராறு செய்துள்ளார். தாய் வீட்டில் இருந்து பணம் வாங்கி வரும்படி, மனைவியை நச்சரித்தார். அவர் மறுத்ததால் சிவராஜ் கோபத்தில் இருந்தார். இம்மாதம் 21ம் தேதி காலை, மகள் பள்ளிக்கு சென்ற பின், மனைவியிடம், 'ஏன் அவ்வப்போது தாய் வீட்டுக்கு செல்கிறாய் என, கேட்டு வாக்குவாதம் செய்தது மட்டுமின்றி, அடிக்கவும் செய்தார். ஒரு கட்டத்தில் கோபமான மனைவியும், கணவரை திருப்பி தாக்கினார்.
இதனால் பொறுமையிழந்த சிவராஜ், மனைவியை கீழே தள்ளி, அவர் மீது அமர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தார். உடலை அங்கேயே விட்டு விட்டு வெளியே சென்றார். மாலை 5:00 மணி வரை வெளியே சுற்றினார். அதன்பின் வீட்டுக்கு வந்த அவர், மனைவி மூச்சு, பேச்சில்லாமல் கிடப்பதாக அக்கம், பக்கத்தினரிடம் அழுது நாடகமாடினார்.
அவரை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து நான்கைந்து மணி நேரமாகி விட்டதாக கூறினர். இதனால் சந்தேகமடைந்த காவ்யாவின் பெற்றோர், கோலார் ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும் கிராமத்துக்கு வந்து, விசாரித்தனர். தம்பதி தினமும் சண்டை போடுவது தெரிந்தது.
சந்தேகத்தின்படி சிவராஜை, தீவிர மாக விசாரித்த போது, மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

