/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆண் குழந்தைக்காக மனைவி தலைமுடியை எரித்த கணவர்
/
ஆண் குழந்தைக்காக மனைவி தலைமுடியை எரித்த கணவர்
ADDED : டிச 09, 2025 06:27 AM

விஜயபுரா: ஆண் குழந்தை ஆசையால் பெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு மனைவியின் தலைமுடியை வெட்டிய கணவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
விஜயபுரா நகரின் ஹொன்னுடகி கிராமத்தில் வசிப்பவர் துன்டேஷ், 32. இவரது மனைவி ஜோதி, 28. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூன்றும் பெண்ணாக பிறந்ததால், ஜோதி மீது வெறுப்பை காட்டினார். அடித்தும், திட்டியும் கொடுமைப்படுத்தினார். துன்டேஷுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தது.
இதற்கிடையே துன்டேஷ் குடும்பத்தினருக்கு, கோல்ஹாரின் முளவாடா கிராமத்தில் வசிக்கும் பெண் மந்திரவாதி மங்களா, 40, என்பவரை பற்றி தெரிந்தது. சில நாட்களுக்கு முன் அவரை சந்தித்து, 'எனக்கு தொடர்ச்சியாக, மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. ஆண் குழந்தை பிறக்க என்ன வழி' என, கேட்டார்.
அப்போது மங்களா, 'உங்கள் மனைவியின் உடலுக்குள் பேய் புகுந்துள்ளது. இதனால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை. பேயை விரட்ட வேண்டுமானால், உங்கள் மனைவியின் நெற்றிப்பகுதியில் ரத்தம் வரும்படி, தலைமுடியை வெட்டி, மயானத்துக்கு கொண்டு சென்று, தீ வைத்து எரிக்க வேண்டும். அப்படி செய்தால் ஆண் குழந்தை பிறக்கும்' என கூறினார்.
இதை நம்பிய கணவர், மனைவி ஜோதியை அடித்து, அவரது தலையின் முன்பகுதி முடியை, பலவந்தமாக பிளேடால் அறுத்து, மயானத்துக்கு கொண்டு சென்று எரித்தார். தலைமுடியை அறுத்ததில், ரத்த காயத்தால் அவதிப்பட்ட ஜோதி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். குணமடைந்த பின், அவரது குடும்பத்தினர், விஜயபுரா ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசாரும் துன்டேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளனர்.

