அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: பிரதீப் ஈஸ்வர்
அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: பிரதீப் ஈஸ்வர்
ADDED : ஆக 04, 2026 07:58 PM

பெங்களூரு: ''எந்தவொரு அதிருப்தியாளர்களின் கூட்டத்திலும் பங்கேற்க மாட்டேன்,'' என, சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான் காங்கிரசின் விசுவாசமான தொண்டன். கட்சி எனக்கு கோவில் போன்றது. காங்கிரஸ் எங்கள் கருவறை. மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல், சிவகுமார், ஹரிபிரசாத் எங்கள் தலைவர்கள். நான் சாமானியராக கருதி, போட்டியிட வாய்ப்பு அளித்தது. எங்கள் கட்சி தலைவர்கள் சொல்வதை பின்பற்றுவேன்.
அமைச்சர் பதவிக்கு, இன்னும் 30 ஆண்டுகள் காத்திருக்கவும் தயார். அதிருப்தியாளர்கள் கூட்டம் நடத்துவோரிடமிருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை. எந்தவொரு அதிருப்தியாளர்களின் கூட்டத்திலும் பங்கேற்க மாட்டேன்.
அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பு. இப்போதே வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. மூத்தவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து விட்டது.
இதன் மூலம், 2028ல் காங்கிரஸ், 150 இடங்களை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.
பா.ஜ.,வினருக்கு வேறு வேலை இல்லாததால், வாய்க்கு வந்தபடி பேசுவர். மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா திறமையற்றவர். அவரால், எத்னாலின் வாயை மூட முடிந்ததா?
இவ்வாறு அவர் கூறினார்.
