/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அதிகரிக்கும் பிளக்ஸ், கட் - அவுட்டுகள் பெங்., மாநகராட்சி அதிகாரிகள் தயக்கம்
/
அதிகரிக்கும் பிளக்ஸ், கட் - அவுட்டுகள் பெங்., மாநகராட்சி அதிகாரிகள் தயக்கம்
அதிகரிக்கும் பிளக்ஸ், கட் - அவுட்டுகள் பெங்., மாநகராட்சி அதிகாரிகள் தயக்கம்
அதிகரிக்கும் பிளக்ஸ், கட் - அவுட்டுகள் பெங்., மாநகராட்சி அதிகாரிகள் தயக்கம்
ADDED : ஏப் 06, 2025 07:12 AM

பெங்களூரு: பெங்களூரின் பல்வேறு இடங்களில் வாழ்த்து கூறும் கட் - அவுட்டுகள், பிளக்ஸ்கள் அதிகரித்துள்ளன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளூர் தலைவர்களின் உருவப்படங்கள் இருப்பதால், இவற்றை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் தயங்குகின்றனர்.
பெங்களூரில் விளம்பர பலகைகள், பிளக்ஸ், கட் - அவுட்டுகளுக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விதிமீறலாக விளம்பர போர்டுகள், கட் - அவுட்டுகள், பிளக்ஸ்கள் பொருத்தினால், அபராதம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் பெங்களூரின் பல்வேறு இடங்களில், வாழ்த்துக் கூறும் பிளக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளூர் தலைவர்களின் உருவப்படங்கள் இருப்பதால், இவற்றை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் தயங்குகின்றனர். அனைத்து கட்சிகளின் பிளக்ஸ்களும் உள்ளன.
மைசூரு சாலையின் காளி ஆஞ்சநேயா கோவில் சுற்றுப்பகுதிகளில் காங்கிரஸ், பா.ஜ., தலைவர்களின் கட் - அவுட்டுகள், பேனர்கள் பெருமளவில் தென்படுகின்றன. பல இடங்களில் சாலைகளிலேயே பொருத்தியதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
அரண்மனை மைதானத்தில், இளைஞர் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தபோது, பல்லாரி சாலை நெடுகிலும் பிளக்ஸ், கட் - அவுட், பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.
இதை பார்த்த துணை முதல்வர் சிவகுமார், அதிருப்தி அடைந்தார். உடனடியாக பிளக்ஸ், கட் - அவுட்களை அகற்றி அபராதம் விதிக்கவும் சம்பந்தப்பட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவும் மாநகராட்சி அதிகாரகளுக்கு உத்தரவிட்டார்.
இதன்படி 12 எப்.ஐ.ஆர்.,களை பதிவு செய்த அதிகாரிகள், 12 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர். மைசூரு சாலை - பி.ஹெச்.இ.எல்., சந்திப்பில், எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா மற்றும் அவரது இரண்டு மகன்களின் கட் - அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்தை கண்காணிக்க பொருத்தப்பட்ட அதிநவீன கண்காணிப்பு கேமராக்களுக்கு குறுக்கே, கட் - அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சந்திப்பு, 20 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது. சென்னப்பட்டணா பொம்மை மாதிரிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த சந்திப்பு எப்போதும், பிளக்ஸ், பேனர்களால் சூழப்பட்டுள்ளது. இவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றவே இல்லை.
கோவிந்தராஜ நகர், விஜயநகர், மைசூரு சாலை சந்திப்பு மற்றும் சுற்றுப்புறங்களில் வாழ்த்துக் கூறும் பிளக்ஸ்கள் காணப்படுகின்றன. இது பற்றி பொது மக்கள் புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. அமைச்சர்கள் உத்தரவிட்டால் மட்டுமே, அகற்றுகின்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் பெயரிலேயே, ஏராளமான பிளக்ஸ்கள் உள்ளன. நாங்கள் அவற்றை அகற்ற முற்பட்டால், உயர் அதிகாரிகள் மூலம் நெருக்கடி கொடுத்து, எங்களை தடுக்கின்றனர். பல நேரங்களில் சம்பந்தப்பட்டவர்களே எங்களை தொடர்பு கொண்டு திட்டுகின்றனர்.
இச்சூழ்நிலையில், பிளக்ஸ்கள், கட் - அவுட்களை அகற்றுவது கஷ்டம். அபராதமும் விதிக்க முடியாது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்கள் பிளக்ஸ், கட் அவுட்டுகள் வைக்கின்றனர். இவர்களுக்கு நோட்டீஸ் அளித்தாலும் பயன் இருக்காது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

