/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இந்திரா உணவகங்களில் வசதிகள் பற்றாக்குறை வாடிக்கையாளர்கள் சாப்பிட தயக்கம்
/
இந்திரா உணவகங்களில் வசதிகள் பற்றாக்குறை வாடிக்கையாளர்கள் சாப்பிட தயக்கம்
இந்திரா உணவகங்களில் வசதிகள் பற்றாக்குறை வாடிக்கையாளர்கள் சாப்பிட தயக்கம்
இந்திரா உணவகங்களில் வசதிகள் பற்றாக்குறை வாடிக்கையாளர்கள் சாப்பிட தயக்கம்
ADDED : ஏப் 22, 2025 05:20 AM
பெங்களூரு: ஏழைகள், கூலி தொழிலாளர்களின் வயிற்றை நிரப்பும் இந்திரா உணவகங்களில், அடிப்படை வசதிகள் பற்றாக்குறை உள்ளது. துாய்மையும் இல்லாததால், வாடிக்கையாளர்கள் சாப்பிட தயங்குகின்றனர்.
ஏழைகளின் நலனுக்காக, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, 2017ல் 'இந்திரா உணவகம்' திட்டத்தை செயல்படுத்தியது. முதற்கட்டமாக பெங்களூரிலும், அதன்பின் மற்ற மாவட்டங்களிலும் திறக்கப்பட்டன. ஏழைகள், தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், மாணவர்கள் உட்பட, பலருக்கும் இந்திரா உணவகங்கள் உதவியாக இருந்தன.
இந்த உணவகங்களில் காலை சிற்றுண்டி ஐந்து ரூபாய்க்கும்; மதியம், இரவு உணவு 10 ரூபாய்க்கும்கிடைக்கிறது. சித்தராமையா இரண்டாவது முறை முதல்வரான பின், இந்திரா உணவகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டன.
ஆனால் ஏழைகளுக்கு மிகவும் உதவியாக உள்ள இந்திரா உணவகங்களில், தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக பெங்களூரில் உள்ள பெரும்பாலான உணவகங்களில், துாய்மையை பின்பற்றுவது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
ஹலசூரு கேட் போலீஸ் நிலையம் அருகில் இந்திரா உணவகம் உள்ளது. தர்மராய கோவில், நகர்த்தன பேட் உட்பட சுற்றுப்பகுதிகளில் பணியாற்றும் ஊர்க்காவல் படையினர், கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் உணவகத்துக்கு வருகின்றனர்.
இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வசதிகள் இல்லை.
கூரை சிதிலமடைந்துள்ளது. மழை பெய்தால் ஒழுகுகிறது. தண்ணீர் தொட்டி பழுதடைந்துள்ளது. உணவக ஊழியர்கள் பிளாஸ்டிக் குடங்களில், தண்ணீரை நிரப்பி வைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சாதம், சாம்பாரை சூடாக வைத்திருக்க ஹாட் பாக்ஸ்களும் இல்லை. உணவக உட்புறம், வெளி வளாகங்களில் துாய்மை, சுகாதாரம் இல்லை. பெங்களூரில் உள்ள பெரும்பாலான இந்திரா உணவகங்கள், ஏழெட்டு ஆண்டு பழமையானவை. அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்படுகின்றன. இதற்கு பொருளாதார நெருக்கடியே காரணம்.
மற்ற ஹோட்டல்கள், உணவகங்களில் உணவு, சிற்றுண்டி விலை இரட்டிப்பு அதிகம். ஏழைகள், கூலி தொழிலாளர்கள் இந்திரா உணவகங்களையே நம்பியுள்ளனர்.
எனவே உணவகங்களை துாய்மையாக வைத்திருக்க வேண்டும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, பலரும் வலியுறுத்துகின்றனர்.