மங்களூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் விரைவில் அமைக்கப்பட வாய்ப்பு
மங்களூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் விரைவில் அமைக்கப்பட வாய்ப்பு
UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:44 PM

– நமது நிருபர் –: கி ரிக்கெட் ரசிகர்களின் பல ஆண்டு கோரிக்கையான, மங்களூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான கதவு திறந்துள்ளது. விரைவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலோர மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என்ற இம்மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு, விரைவில் நனவாக உள்ளது.
இது தொடர்பாக, எம்.யு.டி.ஏ., எனும் மங்களூரு நகர மேம்பாட்டு ஆணையமும், கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கமும் நடத்திய பேச்சில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு மாநிலத்தில் புவியியல் ரீதியாக மிகவும் பொருத்தமான நகரமாக மங்களூரு உள்ளது. கே.எல்.ராகுல் போன்ற உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் போல, மாநிலத்துக்கும், நாட்டுக்கும் அளவற்ற கிரிக்கெட் வீரர்களை வழங்கி உள்ளது. அதே வேளையில், ரஞ்சி கோப்பை, ஐ.பி.எல்., அல்லது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை உள்ளூரில் நடத்த, நவீன வசதியுடன் கூடிய மைதானம் இல்லாததால், திறமையான வீரர்கள், பெங்களூரு அல்லது பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
எம்.யு.டி.ஏ., அமைப்பு தலைவர் சந்தோஷ்குமார் ஷெட்டி, விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, கே.எஸ்.சி.ஏ., தலைவர் வெங்கடேஷ்பிரசாத்தை சந்தித்து, ஒரு திட்ட முன்மொழிவை சமர்ப்பித்தார்.
அதில், விளையாட்டு மைதானம் கட்ட குறைந்தது, 40 முதல், 50 ஏக்கர் நிலம் தேவை. அதற்காக இரண்டு பொருத்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. எம்.யு.டி.ஏ., வசம் உள்ள மொத்தம், 75 ஏக்கர் நிலத்தில், விளையாட்டு மைதானத்துக்காக, 40 முதல் 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யப்படும்’ என குறிப்பிட்டிருந்தது.
கே.எஸ்.சி.ஏ., விதிகளின்படி, அந்த நிலம் முழுதாக வாங்குவதற்கோ அல்லது நீண்ட கால குத்தகை அடிப்படையிலோ கையகப்படுத்த தயாராக உள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மைதானம் கட்டுமானம், ஆடுகள மேம்பாடு, பார்வையாளர் அரங்கம் ஆகியவற்றை, கட்டுமான முழு செலவையும் கே.எஸ்.சி.ஏ.,வே ஏற்கும்.
இது குறித்து, எம்.யு.டி.ஏ., தலைவர் சந்தோஷ் குமார் ஷெட்டி கூறியதாவது:
நான், மங்களூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய தலைவராக பொறுப்பேற்ற நாளிலேயே, எம்.யு.டி.ஏ., என்பது, கிரிக்கெட் விளையாட்டுக்கு இடம் ஒதுக்கும் அமைப்பாக மட்டும் இருக்கக்கூடாது; மாறாக மங்களூரின் வளர்ச்சிக்கு ஒரு நிரந்தர பங்களிப்பை வழங்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.
மங்களூரின் குழந்தைகள் நீண்ட காலமாக விளையாட்டு மைதானம் வேண்டும் என்று கனவு கண்டு வருகின்றனர். மங்களூரின் ஆற்றலை கண்ட, கே.எஸ்.சி.ஏ தலைவர் வெங்கடேஷ்பிரசாத், உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டார்.
மங்களூரில் செலியாரு மற்றும் என்.எம்.பி.ஏ., எல்லைகளில் ஏற்கனவே ஒரு இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
வெங்கடேஷ்பிரசாத் விரைவில் மங்களூரு வந்து, இடத்தை ஆய்வு செய்வார்.
பின், மாவட்ட பொறுப்பு அமைச்சர் யு.டி.காதர் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தி, இடத்தை இறுதி செய்து, இந்தத் திட்டத்திற்கு ஒரு உறுதியான அடித்தளத்தை அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
