ஐ.பி.எஸ்., அதிகாரி முன்ஜாமின் ரத்து 3 வாரத்தில் சரணடைய உத்தரவு
ஐ.பி.எஸ்., அதிகாரி முன்ஜாமின் ரத்து 3 வாரத்தில் சரணடைய உத்தரவு
UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 06:47 PM

– நமது நிருபர் –: அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கில், கர்நாடக ஐ.பி.எஸ்., அதிகாரி ஸ்ரீநாத் ஜோஷிக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமினை, உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்துள்ளது. மூன்று வாரங்களில் போலீசில் சரண் அடையும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றுபவர் ஸ்ரீநாத் ஜோஷி. இவர் கூறியதால், முன்னாள் போலீஸ்காரர் நிங்கப்பா, அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்தார். நிங்கப்பாவை கடந்த ஆண்டு லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர். கைதில் இருந்து தப்பிக்க, உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீநாத் ஜோஷி முன்ஜாமின் பெற்றார்.
இதை எதிர்த்து லோக் ஆயுக்தா அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்தது. இம்மனுவை நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவ் அமர்வு விசாரித்து வந்தது.
நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது, லோக் ஆயுக்தா சார்பில் ஆஜரான வக்கீல் விக்ரம் ஹெக்டே ஆஜரானார்,
அவர் வாதிடுகையில், ‘‘வழக்கின் முதல் குற்றவாளியான நிங்கப்பா பணியில் இருந்து நீக்கப்பட்ட போலீஸ்காரர். இவருடன் ஸ்ரீநாத் ஜோஷி தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. குற்றம்சாட்டப்பட்ட இருவரும் அரசு அதிகாரிகளை மிரட்டி அதில் கிடைத்த பணத்தை, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளனர்,’’ என்றார்.
ஸ்ரீநாத் ஜோஷி தரப்பு வக்கீல் வாதிடுகையில், ‘அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ளும்படி நிங்கப்பாவிடம், ஸ்ரீநாத் ஜோஷி தான் கூறினார் என்பதற்கான ஆவணங்களை, லோக் ஆயுக்தா இங்கு வழங்கவில்லை. பொறுப்பான பதவி வகிக்கும் அவர் மீது வீண் பழி சுமத்த முயற்சி நடக்கிறது’ என்றார்.
இதை கேட்டு கோபம் அடைந்த நீதிபதிகள், ‘நிங்கப்பாவும், ஜோஷிக்கும் இடையிலான வாட்ஸாப் உரையாடலில் ‘கேஜி’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்ன?’ என்று கேட்டனர்.
இதற்கு ஜோஷி தரப்பு வக்கீல் பதில் சொல்ல முடியாமல் விழித்தார். ‘உயர் பதவியில் இருப்போர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை பொறுத்து கொள்ள முடியாது’ என்று கூறிய நீதிபதிகள், கர்நாடக உயர் நீதிமன்றம், ஸ்ரீநாத் ஜோஷிக்கு வழங்கிய முன்ஜாமினை ரத்து செய்தனர்.
மேலும், ‘மூன்று வாரங்களுக்குள் போலீசில் சரண் அடைய வேண்டும்’ என்று ஸ்ரீநாத் ஜோஷிக்கு, நேற்று கெடு விதித்தனர்.
