/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தேசிய கொடியை அவமதிப்பதா? காங்கிரஸ் போடும் கணக்கு
/
தேசிய கொடியை அவமதிப்பதா? காங்கிரஸ் போடும் கணக்கு
ADDED : மே 14, 2025 12:23 AM

கர்நாடகாவில் காங்கிரஸ், பா.ஜ., என இருவரும் அனைத்து விஷயங்களிலும் அரசியல் செய்ய தயாராக இருக்கின்றனர். சமீப காலமாக இது மேலும் தீவிரம் அடைந்து உள்ளது.
மாநில அரசு அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியதாக கூறி பா.ஜ.,வும்; விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என காங்.,கும் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தினர்.
மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டண உயர்வுக்கும் இது போல மாறி மாறி பழி போட்டு கொண்டனர். ஆனால், இறுதிவரை நாங்கள் தான் விலையை உயர்த்தினோம் என யாரும் சொல்லவில்லை. இவர்களின் அரசியலில், உண்மையில் பாதிக்கப்படுவது பாமர மக்களே.
ஆப்பரேஷன் சிந்துார்
தற்போது, 'ஆப்பரேஷன் சிந்துார்' எனும் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை ஒழித்து கட்டியதற்கான பாராட்டுகள் பா.ஜ.,வுக்கு போய்விடக்கூடாது என காங்கிரஸ் கண்ணும், கருத்துமாக கவனித்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று முன்தினம் முதல்வர் சித்தராமையா, 'ஆப்பரேஷன் சிந்துாரில் முழு பாராட்டுதலும் ராணுவ வீரர்களுக்கே' என பதிவிட்டார்.
இதை பா.ஜ., தலைவர்கள் பலரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 1971 போரின் பெருமை காங்கிரஸ் மற்றும் இந்திராவுக்கானதே என கூறப்படும் போது, இதுவும் பிரதமர் மோடிக்கும், பா.ஜ.,வுக்குமே கிடைக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்த பெயர் பா.ஜ.,வுக்கு கிடைப்பதை தடுக்க, கர்நாடக காங்கிரஸ் கையில் எடுத்துள்ள விவகாரம் தான் தேசிய கொடி.
ஜெயநகர் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ராமமூர்த்தி. இவர் கடந்த 9ம் தேதி, ஜெயநகர் 9வது பிளாக் பகுதியில், ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில், அந்த பகுதியில் வசிப்போருக்கு இனிப்புகள் வழங்கினார்.
அப்போது, அவருக்கு அருகில் நின்று இனிப்பு பரிமாறிய ஒருவர், தனது கையை தேசிய கொடியில் துடைத்தார்.
இது இணையத்தில் பரவியது. இதை காங்கிரஸ் தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டது.
எம்.எல்.ஏ., ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறி வந்தது. 'பா.ஜ.,வினருக்கு தேசப்பற்று கிடையாது' என, தன் அரசியல் விளையாட்டை துவக்கியது.
எம்.எல்.ஏ., விளக்கம்
இவ்விஷயம் தீவிரம் அடைவதை புரிந்து கொண்ட ராமமூர்த்தி, ''தேசிய கொடியை நான் அவமதிக்கவில்லை. என் அருகில் இருந்த நபரே அவமதித்தார். இது காங்., பகிர்ந்த வீடியோவிலே இருந்தது. அப்படி இருக்கும் போது, வேண்டுமென்ற என் மீது பழி சுமத்தப்பட்டு உள்ளது,'' என்றார்.
விசாரணை
ஆனாலும், எம்.எல்.ஏ., விளக்கத்தை கண்டுகொள்ளாத காங்கிரஸ், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.
உச்சக்கட்டமாக திலக்நகர் போலீஸ் நிலையத்தில் மஞ்சுநாத் என்பவர் புகார் செய்தார். இதன்படி, எம்.எல்.ஏ.,வுடன் இருந்த கிருஷ்ணப்பா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கிருஷ்ணப்பா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், 'தேசிய கொடியை அவமதிக்கும் நோக்கில் செய்யப்படவில்லை' என குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு இடைகால தடை விதித்தார்.
இந்நிலையில், எம்.எல்.ஏ., ராமமூர்த்தியும், பா.ஜ., தலைவர்களும் தேசிய கொடியை அவமதித்து உள்ளனர்.
போலி தேசபக்தி உடைய பா.ஜ.,வினர் ஒருபோதும் தேசிய கொடிக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் மரியாதை அளிக்க மாட்டார்கள் என, காங்கிரஸ் தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.
நீதிமன்ற விசாரணையில் உள்ள விஷயம் குறித்து, காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற விஷயங்களை தொடர்ந்து பேசி, ஆப்பரேஷன் சிந்துாருக்கான பாராட்டை பா.ஜ., பெற்று விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர்.
- நமது நிருபர் -