அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை அடுத்து சிக்குகிறார் அமைச்சர் பிரியங்க்?
அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை அடுத்து சிக்குகிறார் அமைச்சர் பிரியங்க்?
UPDATED : நவ 18, 2026 12:00 AM
ADDED : நவ 17, 2026 09:54 PM

பெங்களூரு: பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சராக பிரியங்க் கார்கே இருந்தபோது, உதவி செயற் பொறியாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின்படி, சிறையில் உள்ள கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா, கீதா, ஞானேந்திரகுமாரிடம், ஈ.டி., எனும் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி உள்ளதால், பிரியங்க் கார்கேவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு தேர்வாணயம் சார்பில் பல்வேறு அரசு துறைகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தேர்வாகும் தேர்வர்கள், அரசு பணியில் அமர்த்தப்படுவர்.
சிறையில் அடைப்பு
நடப்பாண்டு ஜனவரியில் நடந்த கால்நடை மருத்துவர் தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக, கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாகுகர், உறுப்பினர் கீதா, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஞானேந்திரகுமார், இடைத்தரகராக செயல்பட்ட பசவராஜ் கன்னிலே ஆகியோர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கே.பி.எஸ்.சி., ஆட்சேர்ப்பு முறைகேடு தொடர்பாக, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே மீது, மத்திய அமைச்சர் குமாரசாமி, ‘பிரியங்க் கார்கே கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையின் கீழ் வரும் ஏ.இ.இ., எனும் உதவி செயற்பொறியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறைகேடு மற்றும் ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள் திருத்த முறைகேடு நடந்தது’ என குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த பிரச்னையை விசாரணைக்கு எடுத்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சிவசங்கரப்பா சாகுகர், கீதா, ஞானேந்திரகுமாரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையின் போது, ஏ.இ.இ., தேர்வில் நடந்த முறைகேடுகள், தேர்வர்களின் ஓ.எம்.ஆர்., விடைத்தாள்களில் எப்படி திருத்தம் செய்யப்பட்டது; இதில் யாருக்கெல்லாம் பங்குள்ளது என்பது போன்று அமலாக்க துறை அதிகாரிகள் பல்வேறு கேள்வி எழுப்பினர்.
முறைகேடு
இதற்கு மூவரும், ‘தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும் என்றும்; இந்த முறைகேட்டின் முழு விபரங்கள், அதன பின்னணி செயல்பாடுகள் குறித்து தெரியாது’ என்றும் கூறி உள்ளனர்.
அதேவேளையில், கே.பி.எஸ்.சி., உறுப்பினர் முஸ்தபா தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தியதாக தெரிவித்து உள்ளனர். இந்த கமிஷன் விசாரணையில், முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததா; விடைத்தாள்களில் திருத்தம் செய்யப்பட்டதா என்பது குறித்து தங்களுக்கு தெரியாது’ என்று கூறி உள்ளனர்.
இதையடுத்து முஸ்தபா கமிஷன் விசாரணை அறிக்கை மற்றும் ஏ.இ.இ., தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணையை ஈ.டி., துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால், பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சராக இருந்த பிரியங்க் கார்கேவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, வால்மீகி ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, எஸ்.ஐ.டி., – சி.பி.ஐ., – ஈ.டி., நடத்திய விசாரணையில், நாகேந்திரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் மூலம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
