/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
20 அமைச்சர்களை நீக்க சித்தராமையா முடிவு?
/
20 அமைச்சர்களை நீக்க சித்தராமையா முடிவு?
ADDED : அக் 10, 2025 04:41 AM

பெங்களூரு: சரியாக செயல்படாத 20 அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை நியமிக்க முதல்வர் சித்தராமையா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 13ம் தேதி இரவு, அமைச்சர்களை, இரவு விருந்துக்கு முதல்வர் அழைத்துள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாத இறுதியுடன் அரசு பதவியேற்று, இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் என அமைச்சரவையில் 34 பேர் இடம் பெற முடியும். நாகேந்திரா ராஜிநாமா, ராஜண்ணாவின் நீக்கத்தால், தற்போது 32 பேர் உள்ளனர்.
அமைச்சரவையில் உள்ளவர்களில் ஒரு சிலர் மட்டுமே சுறுசுறுப்பாக வேலை செய்கின்றனர். பெரும்பாலான அமைச்சர்களுக்கு தன் துறையிலேயே என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. பெயருக்கு தான் அமைச்சர் பதவியில் இருக்கின்றனர்.
தங்கள் துறையில் புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. கட்சியை வலுப்படுத்தவும் எதுவும் செய்யவில்லை. பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறிக்கோளாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
* இரவு விருந்து
சில அமைச்சர்கள் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களே பகிரங்கமாக குற்றஞ்சாட்டும் நிலைதான் இருக்கிறது. செயல்படாத அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு தரும்படி கோரிக்கை எழுந்தது. அமைச்சரவையில் மாற்றம் செய்வது பற்றி, கட்சி மேலிட தலைவர்களிடமும், சித்தராமையா அடிக்கடி விவாதித்து வந்தார்.
எட்டு முதல் 10 அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு தரும்படி மேலிடமும் கூறிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் 15 முதல் 20 அமைச்சர்களை நீக்க முதல்வர் சித்தராமையா முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்நிலையில், வரும் 13ம் தேதி இரவு, காவிரி இல்லத்தில் அமைச்சர்களுக்கு, சித்தராமையா இரவு விருந்து அளிக்க உள்ளார். அன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்வது பற்றியும், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ள அமைச்சர்களை சமாதானப்படுத்தவும், முதல்வர் திட்டமிட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் பெரும்பாலான அமைச்சர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
அமைச்சர்களை நீக்கும் பின்னணியில், சித்தராமையாவின் அரசியல் தந்திரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற, துணை முதல்வர் சிவகுமார் தரப்பு முயற்சித்து வருகிறது.
ஒப்பந்தத்தில் கூறப்படுவது போன்று ஆளுக்கு இரண்டரை ஆண்டு பதவி என்றால், இம்மாதம் இறுதியில் சித்தராமையா பதவி விலக வேண்டும். தன் பதவியை தக்கவைத்துக் கொள்ள 20 பேருக்கு அமைச்சர் வழங்கி, அதிருப்தியை சமாளிக்க அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பதவி விலகும் அமைச்சர்களின் அதிருப்தியை முதல்வர் எப்படி சமாளிக்கப் போகிறாரோ என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
வாக்குறுதி பீஹார் தேர்தலுக்கு பின், கர்நாடக அமைச்சரவையில் மாற்றம் நடக்கும். கோலார் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களில், நான் தான் சீனியர். எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, எனக்கு அளித்த வாக்குறுதிபடி, கட்சி மேலிட தலைவர்கள் செயல்படுவர் என நம்புகிறேன். - நாராயணசாமி, எம்.எல்.ஏ., பங்கார்பேட்டை.
எனக்கு தெரியாது அமைச்சரவை மாற்றம் குறித்து என்னிடம் எந்த தகவலும் இல்லை. இது கட்சி மேலிடம், முதல்வர் எடுக்கும் முடிவு. அமைச்சர்களை, இரவு விருந்திற்கு முதல்வர் அழைத்து இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஒன்றாக கூடி உணவு சாப்பிட்டு, பல விஷயங்கள் பற்றி ஆலோசிப்பது அரசியலில் இயல்பானது. - சிவகுமார், துணை முதல்வர்