'பள்ளங்கள் ஏற்படாதவாறு சாலை அமைப்பது சுலபம் விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் அளவுக்கு கடினமானதல்ல'
'பள்ளங்கள் ஏற்படாதவாறு சாலை அமைப்பது சுலபம் விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் அளவுக்கு கடினமானதல்ல'
ADDED : ஜூன் 17, 2026 02:02 AM

பெங்களூரு: ''பள்ளங்கள் ஏற்படாதவாறு சாலை அமைப்பது எளிதான விஷயம்; விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் அளவுக்கு கடினமானது அல்ல,'' என அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கூறி உள்ளார்.
பெங்களுரு நகர வளர்ச்சி துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், அதிகாரிகளுடன் முதல் முறையாக கிருஷ்ண பைரேகவுடா ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
நேற்று ஜி.பி.ஏ., தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், நகர்ப்புற வளர்ச்சி துறை கூடுதல் தலைமை செயலர் துஷார் கிரிநாத், பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவன தலைமை செயல் அதிகாரி கரி கவுடா, சிறப்பு கமிஷனர்கள் முனிஷ் மவுத்கில், ஹரிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் பேசியதாவது:
பெங்களூரில் 1.50 கோடி மக்கள் வசிக்கின்றனர். வேலை, கல்வி உள்ளிட்ட பல காரணங்களுக்காக இங்கு உள்ளனர். பெங்களூரு, கர்நாடகாவுக்கு மட்டுமின்றி, நம் நாட்டிற்கே மிகப்பெரிய சொத்தாக விளங்குகிறது. சாலை பராமரிப்பு, தெருவிளக்குகள், போக்குவரத்து நெரிசல், நீர் மாசுபாடு போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே, பெங்களூரு ஐந்து மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டன.
நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சுரங்கப்பாதை, மேம்பாலங்கள் போன்றவை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மக்கள் பிரச்னைகளை அதிகாரிகள் விரைந்து தீர்க்க வேண்டும். தற்போதுள்ள நிர்வாக அமைப்பு முறையாக செயல்பட்டால் மட்டுமே பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பெங்களூரின் வளர்ச்சிக்கு நிறைய திட்டங்கள் உள்ளன. இதை செயல்படுத்த எதிர்க்கட்சியினர், மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். சாலை பள்ளங்களை மூடுவதற்கு தேவையான நிதி உள்ளது.
பள்ளங்களை மூடும்பணிகள் முறையாகவும், தரமானதாகவும் நடக்க வேண்டும். பள்ளங்கள் ஏற்படாதவாறு சாலை அமைப்பது எளிதான விஷயம்; விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் அளவுக்கு கடினமானது அல்ல. பெங்களூரில் சாலைகள் மிகவும் மோசமாக இருப்பது உண்மையே.
மழைநீர் வடிகால் துார்வாறும் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். பருவமழையின் போது வெள்ளம் ஏற்படாமல் இருப்பதை தடுக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்விஷயத்தில் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
