/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முடா வழக்கில் இறுதி அறிக்கை தாமதம் லோக் ஆயுக்தா மீது நீதிபதி சந்தோஷ் கோபம்
/
முடா வழக்கில் இறுதி அறிக்கை தாமதம் லோக் ஆயுக்தா மீது நீதிபதி சந்தோஷ் கோபம்
முடா வழக்கில் இறுதி அறிக்கை தாமதம் லோக் ஆயுக்தா மீது நீதிபதி சந்தோஷ் கோபம்
முடா வழக்கில் இறுதி அறிக்கை தாமதம் லோக் ஆயுக்தா மீது நீதிபதி சந்தோஷ் கோபம்
ADDED : டிச 19, 2025 05:08 AM
பெங்களூரு: முடா வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க தாமதம் செய்வதால், லோக் ஆயுக்தா மீது, நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.
முடா எனும், மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், பயனாளிகளுக்கு 50:50க்கு சதவீதத்தின் கீழ், வீட்டுமனை ஒதுக்கியதில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு பற்றி, லோக் ஆயுக்தா விசாரித்து வருகிறது. முடாவில் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, முதல்வர் சித்தராமையா, தனது மனைவி பார்வதிக்கு, 56 கோடி ரூபாய் மதிப்பிலான, 14 வீட்டு மனைகளை வாங்கி கொடுத்ததாக, மைசூரு சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா அளித்த புகாரில், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி, சித்தராமையா, பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன சாமி, நில உரிமையாளர் தேவராஜ் ஆகியோர் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். சித்தராமையா உட்பட நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என்று, பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்கக்கூடாது என்று, சிநேகமயி கிருஷ்ணா தாக்கல் செய்த மனு மீதும் விசாரணை நடந்து வருகிறது.
'கேஸ் டைரி' டிசம்பர் 18ம் தேதியான நேற்று முடா முறைகேடு வழக்கு தொடர்பான இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று, நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் உத்தரவிட்டு இருந்தார். நேற்று நடந்த விசாரணையின் போது, லோக் ஆயுக்தா சார்பில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
லோக் ஆயுக்தா வக்கீல் வெங்கடேஷ் அரபட்டி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தரும்படி, நீதிபதியிடம் கேட்டார். இதனால், கடும் கோபம் அடைந்த நீதிபதி, உங்களுக்கு எத்தனை முறை கூடுதல் அவகாசம் தருவது. கேஸ் டைரியை எப்போது சமர்பிப்பீர்கள் என்று கேட்டார்.
இன்று கேஸ் டைரியை சமர்ப்பிப்பதாக கூறிய வக்கீல் வெங்கடேஷ் அரபட்டி, ''முடா வழக்கில் விசாரணை முடிந்து விட்டது. அறிக்கையை சமர்ப்பிக்கும் முன், அரசு அனுமதி பெறுவது அவசியம். அனுமதிக்காக காத்து இருக்கிறோம்,'' என்றார்.
அதனை ஏற்ற நீதிபதி, மனுதாரர் சிநேகமயி கிருஷ்ணா, அரசு தரப்பு ஆட்சேபனை தாக்கல் செய்யவும் வாய்ப்பு அளித்து, அடுத்த விசாரணையை வரும் 23 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பின், சிநேகமயி கிருஷ்ணா அளித்த பேட்டியில் கூறுகையில், ''முடா வழக்கின் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும் விஷயத்தில், வேண்டும் என்றே, லோக் ஆயுக்தா கால தாமதம் செய்கிறது. நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் முயற்சி நடக்கிறது. லோக் ஆயுக்தா போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி சிக்குவது உறுதி. அவர்கள் என்ன சர்வாதிகாரிகளா,'' என்றார்.

