ADDED : ஆக 23, 2026 11:03 PM

- நமது நிருபர் -:
வீட்டு பயன்பாட்டுக்காக, வாங்கிய ஒரு பசுவால், பெண் ஒருவர் தொழிலதிபராக வளர்ந்துள்ளார். பலருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளார். தினமும், 500 லிட்டர் பால் உற்பத்தியாகிறது.
இன்றைய காலத்தில், மாத ஊதியத்துக்கு பணியாற்றுவதை விட, சுய தொழில் துவங்கி, வெற்றி அடைய பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். சிலர் அதில் வெற்றியும் அடைகின்றனர். இவர்களில் ஜோதி அவினாஷ் உப்லாவ்கரும் ஒருவர். பால் உற்பத்தியில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளார். இதற்கு அவரது கடின உழைப்பும், விடா முயற்சியும் முக்கிய காரணமாகும்.
கலபுரகி நகரின், சையத் சிஞ்சொள்ளி கிராமத்தில் வசிப்பவர் ஜோதி. இவர், 20 ஏக்கர் நிலத்தில், விவசாயம் செய்து வருகிறார். இவரது வீட்டு பயன்பாட்டுக்கு, பால் தேவைப்பட்டதால் ஒரு பசுவை வாங்கினார். வீட்டு தேவைக்கு போக, மிச்சமான பாலை விற்க துவங்கினார். அதன் பின் பால் உற்பத்தியில், அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஒன்றன் பின் ஒன்றாக, எருமை மாடுகளை வாங்கி, வளர்க்க ஆரம்பித்தார்.
தற்போது அவரது கால்நடைப்பண்ணையில், 100 ஹரியானா இன எருமைகள் உள்ளன. எருமைகளை பராமரிக்க, பீஹார் மற்றும் ஹரியானா மாநிலத்தின், 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நியமித்துள்ளார். 20 ஏக்கர் நிலத்தில், 10 ஏக்கரில் மாடுகளுக்கு தேவையான தீவனம் வளர்க்கிறார்.
கோடைக்காலத்தில் பசும்புல் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், சோளம், துவரை போன்ற தீவனங்களை வளர்த்து, சேகரித்து வைக்கிறார். மாடுகளை நோய்கள் பாதிக்காமல், தொழிலாளர்கள் பராமரிக்கின்றனர்.
நேரத்துக்கு சரியாக தடுப்பூசி போட்டு, மாடுகளின் ஆரோக்கியத்தை காப்பாற்றுகின்றனர். ஒரு பசுமாட்டுடன் துவங்கிய, ஜோதியின் பால் உற்பத்தி தொழில், இன்று 100 மாடுகளுடன் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
இது குறித்து, ஜோதி அவினாஷ் கூறியதாவது:
எங்கள் கால்நடைப்பண்ணையில் தினமும், 500 லிட்டர் பால் உற்பத்தியாகிறது. 250 முதல், 300 வீடுகளுக்கு, தொழிலாளர்கள் மூலமாக விற்கப்படுகிறது. கூடுதல் பாலை, ஹோட்டல்களுக்கு விற்கிறோம். எங்களுக்கு பாலில் மட்டுமின்றி, சாணத்தில் இருந்தும், நல்ல வருவாய் கிடைக்கிறது.
எங்களின் டெய்ரியிலேயே, கோபர் காஸ் எனும், சாணத்திலிருந்து எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. எங்களின் கால்நடைப்பண்ணையில் பணியாற்றும் ஐந்து குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்கள், இந்த கோபர் காசை பயன்படுத்தியே, சமையல் தயாரிக்கின்றனர்.
நாமே அனைத்து வேலை களையும் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தொழிலாளர்களின் உதவியுடன் செய்து கொள்ளலாம்.
வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் வழங்க வேண்டும் என்பது, எங்களின் நோக்கமாகும். வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கும் பாலில், நாங்கள் தண்ணீர் கலப்பது இல்லை. 100 எருமைகளை வளர்க்க வேண்டும் என்பது, எங்களின் ஆசையாக இருந்தது. அது இப்போது நனவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
