கடபகெரே கிராஸ் - செல்லகட்டா 10 கி.மீ., துார சாலை இன்று திறப்பு
கடபகெரே கிராஸ் - செல்லகட்டா 10 கி.மீ., துார சாலை இன்று திறப்பு
ADDED : ஜூன் 26, 2026 11:52 PM
பெங்களூரு: பெங்களூரின் கடபகெரே கிராசில் இருந்து செல்லகட்டா வரை 10.7 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பத்து வழி சாலை இன்று திறக்கப்படுகிறது.
பெங்களூரின் மாகடி சாலையில் உள்ள கடபகெரே கிராசில் இருந்து மைசூரு ரோட்டில் உள்ள செல்லகட்டாவை இணைக்கும் வகையில் 10.7 கி.மீ., துாரத்திற்கு பத்து வழி சாலை அமைக்கும் பணிகள், 2018ல் துவங்கப்பட்டன. இந்த பணிகளை பி.டி.ஏ., எனும் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் மேற்கொண்டது. முதலில், 575 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டது.
ஆறு முதன்மை வழித்தடங்கள், நான்கு இணைப்பு சாலைகள் அமைக்கப்பட்டு வந்தன. தற்போது ஆறு வழித்தட பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ள நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்படுகிறது.
முதல்வர் சிவகுமார், பி.டி.ஏ., தலைவர் ஹாரிஸ் உள்ளிட்டோர் திறந்து வைக்கின்றனர்.
இந்த சாலைக்கு முன்னாள் முதல்வர் எம்.எஸ்.கிருஷ்ணா பெயர் சூட்டப்பட்டுள்ளது. பைக்கில் செல்வோருக்கு தனிப்பாதை; கேபிள்களை பதிக்க குழாய் தடங்கள் உட்பட பல சிறப்பம்சம் இந்த சாலையில் உள்ளது. சாலையின் இருபக்கமும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பசுமை வழிதடமாகவும் மாற்ற உள்ளனர்.
இந்த சாலை பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் கடபகெரே கிராசில் இருந்து செல்லகட்டாவுக்கு, இனி 15 முதல், 20 நிமிடங்களில் சென்று விடலாம். இதற்கு முன், ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை ஆனது.
இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த சாலையில் பயணிக்க கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.
இந்த சாலை, நாடபிரபு கெம்பேகவுடா லே - அவுட் வழியாக செல்வதும் குறிப்பிடத்தக்கது.
