/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மயானத்தில் இருக்கும் காளி அம்மன் கோவில்
/
மயானத்தில் இருக்கும் காளி அம்மன் கோவில்
ADDED : ஏப் 29, 2025 06:01 AM

காளி என்றாலே மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் என்று அனைவருக்கும் தெரியும். காளி சிலையை வணங்கினால் மனதிற்கு அமைதி கிடைப்பதுடன், தீய சக்திகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்றும் மக்கள் நம்புகின்றனர்.
பெங்களூரில் 150 ஆண்டுகளுக்கும் மேலான காளி கோவில் உள்ளது. பெங்களூரின் இந்திரா நகர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள மயானத்திற்கு நடுவில் உள்ளது காளி கோவில். இக்கோவில் காளி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.
கோவிலுக்குள் ஆக்ரோஷமான முகத்தில் பிரமாண்ட காளி சிலை உள்ளது. தமிழகத்தின் மேல்மலையனுாரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் இருக்கும் சிலை இங்கும் உள்ளது.
கோவிலுக்குள் தட்சிண காளி, கால பைரவா, பலி தேவா, ருத்ர காளி, காட்டேரி, முனீஸ்வரா, பாவாடை ராயா, சத்திய ஹரிச்சந்திரா உள்ளிட்ட கடவுளுக்கும் தனித்தனி சன்னதி உள்ளது.
தீராத உடல் நல பிரச்சனை, யாராவது பில்லி, சூனியம் வைத்து பாதிக்கப்படுபவர்கள் இங்கு வந்து அம்மனை தரிசனம் செய்தால், தங்களுக்கு இருக்கும் பிரச்னை முழுமையாக தீரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
குழந்தை வரம் இல்லாதவர்களும் இங்கு வந்து அம்மனை நன்கு வேண்டிக்கொண்டு தொட்டில் கட்டி செல்கின்றனர்.
அமாவாசை, சிவராத்திரி அன்று கோவிலில் விசேஷ பூஜைகள் நடக்கிறது.
கோவிலில் உள்ள புற்று மண்ணை எடுத்து பக்தர்கள் பூசி வந்தால் சகல நன்மைகளும் தேடி வரும் என்பது ஐதீகமாக உள்ளது.
இந்த கோவிலுக்கு இந்திரா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அதிகமாக வருகை தருகின்றனர்.
மயானத்திற்குள் இருக்கும் கல்லறைகளை சுற்றி இருப்பதுதான் இந்த கோவிலின் சிறப்பு அம்சம்.
ரயிலில் செல்லலாம்
இந்த கோவிலுக்கு மெட்ரோ ரயிலில் செல்ல நினைப்பவர்கள் இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து நடந்து சென்றுவிடலாம்.
கோவில் தலைவர் பாக்யா, தொடர்புக்கு: 95918 88844.
--- நமது நிருபர் --

