ADDED : ஜூன் 28, 2025 03:06 AM

மைசூரு : கன்னட ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, சாமுண்டி மலைக்கு பக்தர்கள் சாரை சாரையாக வந்து, சாமுண்டீஸ்வரி தேவியை தரிசனம் செய்தனர்.
கன்னட ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி தேவியை தரிசிக்க, அதிகாலை முதலே மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சாரை சாரையாக வந்தனர். அதிகாலை 3:30 மணிக்கு பூஜைகள் துவங்கினாலும், 5:30 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு கோவில் திறக்கப்பட்டது.
மலை அடிவாரத்தில் பக்தர்களுக்காக இலவச பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 60 பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களை அழைத்துச் செல்ல 100 ஊழியர்கள் பணியில் இருந்தனர். 300 ரூபாய், 2,000 ரூபாய் டிக்கெட் பெற்றவர்களுக்கு 'ஏசி' வசதி கொண்ட பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோவிலில் இலவச தரிசனம், 300 ரூபாய்க்கான வரிசை, 2,000 ரூபாய்க்கான வரிசை என மூன்று வரிசைகள் இருந்தன.
சுத்துார் மடம் அருகில் அதிகாலை 3:30 மணி முதலே, அடிவாரத்தில் 1,001 படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் நடந்து வந்தனர். இவர்களுக்காகவும் தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
கோவில் நுழைவு வாயிலில் இருந்து அம்மனின் கருவறை வரை, பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தங்க நிறத்திலான பட்டுப்புடவையில் சாமுண்டீஸ்வரி, லட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் ரேவண்ணா, ஜி.டி.தேவகவுடா, மாளவிகா அவினாஷ், ஸ்ருதி உட்பட தொலைக்காட்சி நடிகர், நடிகையர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி கோவில் மேம்பாட்டு ஆணைய செயலர் ரூபா கூறுகையில், ''முதல் ஆடி வெள்ளிக்கிழமையன்று, பெருமளவில் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். எந்தவித இடையூறும் இல்லாமல், பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்,'' என்றார்.