ADDED : செப் 17, 2026 11:11 PM

- நமது நிருபர் -:
உப்பினங்கடியில் கல்லுாரி மாணவியருக்கு, கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது.
பொது இடங்களில், இளம் பெண்களை கேலி, கிண்டல் செய்யும் சம்பவங்கள், பல இடங்களில் நடக்கின்றன. பாலியல் தொல்லை, பலாத்காரம் போன்ற, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அவ்வப்போது நடக்கின்றன. எனவே மாணவியருக்கு, கராத்தே, குங்பூ போன்ற தற்காப்பு கலை கற்பது அவசியம்.
தட்சிண கன்னடா மாவட்டம், உப்பினங்கடியில் உள்ள அரசு பட்டப்படிப்பு கல்லுாரியில், மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில், பயிற்சி நடக்கிறது.
புத்துாரின், தாமஸ் என்பவரின், 'இம்பேக்ட் ஆர்ட் அண்டு ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி' யின் கவின் மற்றும் அஜய் ஆகியோர், மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கின்றனர். ஆகஸ்ட் 29ம் தேதியன்று, பயிற்சி துவங்கியது. மாணவியர் ஆர்வத்துடன், பயிற்சி பெறுகின்றனர். தற்காப்புக்கு மட்டுமின்றி, வரும் நாட்களில் கராத்தே சாம்பியன்களாகவும், இந்த பயிற்சி அவர்களுக்கு உதவும்.
இதுகுறித்து, பயிற்சியாளர் கவின் கூறியதாவது:
மாணவியர் மிகவும் ஆர்வத்துடன் கராத்தே கற்கின்றனர். இது, அவர்களுக்கு தற்காப்பு கலை எவ்வளவு அவசியம் என்பதை காண்பிக்கிறது. இரண்டு மாதங்கள் பயிற்சி பெற்றால், தங்களை தற்காத்து கொள்ள, தேவையான விஷயத்தை தெரிந்து கொள்ளலாம். தற்போது, முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.
கிக் மற்றும் பஞ்ச் குறித்து பயிற்சி அளிக்கிறோம், இந்த பயிற்சி, மாணவியரின் எலும்புகளை வலுப்படுத்தும். அதன் பின் மற்ற பயிற்சி துவக்கப்படும். எப்போது அபாயம் ஏற்படும் என்பது தெரியாது. எதிர்பாராமல் தங்கள் மீது தாக்குதல் நடந்தால், எப்படி தப்பிப்பது என்பதை, செயல் முறையில் கற்றுத்தரப்படுகிறது.
இளம்பெண்கள் சாலையில் செல்லும் போது, திடீரென கட்டிப்பிடிக்க வரும் விஷமிகள் உள்ளனர். அப்படி நடக்கும் போது, அவர்களின் கை தங்கள் மீது படாமல், எப்படி தடுப்பது என, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
