/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
13 ஆண்டாக தலைமறைவு கர்நாடகா ஆசாமி கைது
/
13 ஆண்டாக தலைமறைவு கர்நாடகா ஆசாமி கைது
ADDED : ஆக 04, 2025 05:20 AM
சென்னை: மோசடி வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்து, 13 ஆண்டுகளாக போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தாமஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் வினோத்குமார். இவர், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார்.
இவரிடம், கர்நாடக மாநிலம், உடுப்பியைச் சேர்ந்த தாமஸ், 45 என்பவர், மேலாளராக பணிபுரிந்து வந்தார். நம்பிக்கை மோசடி செய்து, பல லட்சம் ரூபாயை கையாடல் செய்தார்.
இதுகுறித்து, நாங்குநேரி போலீஸ் நிலையத்தில், வினோத்குமார் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, தாமசை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்தவர், 2012ல் இருந்து, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
அவரை கைது செய்து ஆஜர்படுத்த, நாங்குநேரி நீதிமன்றம், 'பிடிவாரன்ட்' பிறப்பித்தது. எனினும், 13 ஆண்டுகளாக தாமஸ் பதுங்கி இருக்கும் இடம் குறித்து, போலீசாரால் துப்பு துலக்க முடியவில்லை.
இந்நிலையில், தாமஸ் கர்நாடகா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்திற்கு சென்ற தனிப்படை போலீசார், தாமசை நேற்று முன்தினம் கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்தனர்.