தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடகா முதல்வர் பதவி விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கிறது!: பொது வெளியில் பகிரங்கமாக விவாதிக்கும் கட்சியினர் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் காங்., மேலிடம்

கர்நாடகா முதல்வர் பதவி விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கிறது!: பொது வெளியில் பகிரங்கமாக விவாதிக்கும் கட்சியினர் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் காங்., மேலிடம்

கர்நாடகா முதல்வர் பதவி விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கிறது!: பொது வெளியில் பகிரங்கமாக விவாதிக்கும் கட்சியினர் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் காங்., மேலிடம்


ADDED : பிப் 08, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 05:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவி விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத் துவங்கி உள்ளது. இந்த விஷயத்தில், முதல்வரின் மகன், எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் என பலரும், தங்களது தனிப்பட்ட கருத்துகளை பொதுவெளியில் கூறி வருகின்றனர். இது, மாநில காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

கர்நாடகாவில், 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது, முதல்வர் பதவியில் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவகுமாரும் பதவி வகிக்கலாம் என, கட்சி மேலிடம் ரகசிய ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டது. அதனால், துணை முதல்வர் சிவகுமார், எப்படியாவது முதல்வராக வேண்டும் என, பல புரட்சிகளை செய்தார்.

நவம்பர் புரட்சி

இருப்பினும், எதுவும் எடுபடவில்லை. குறிப்பாக, நவம்பர் புரட்சி என இருவரும், ஒருவர் வீட்டிற்கு மற்றொருவர் என, மாறி, மாறி விருந்து சாப்பிட சென்றது தேசிய நாளிதழ்களில் பெரிய செய்தியாக இடம் பெற்றது. பின்னர், முதல்வர் விவகாரம் குறித்து பேச்சு குறைந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் பொது வெளியில் முதல்வர் விவகாரம் குறித்து கட்சியினர் பேசுவது அதிகரித்துள்ளது.

இதற்கு பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைத்ததே, முதல்வரின் மகன் யதீந்திரா தான். சமீபத்தில் அவர் பேசுகையில், ''காங்கிரஸ் அரசின் முழு பதவிக்காலமும், சித்தராமையாவே முதல்வராக நீடிப்பார். முதல்வர் மாறுவதற்கான வாய்ப்பே இல்லை,'' என்றார்.

இதற்கு சிவகுமார் சுடச்சுட பதிலடி கொடுத்தார். அதாவது, 'யதீந்திரா என்ன கட்சி மேலிடமா; அவர் சொல்வது தான் வேதவாக்கா' என, கேள்வி கேட்டார். இதிலிருந்து, மீண்டும் முதல்வர் பதவி குறித்த பிரச்னை துவங்கி விட்டது.

உள்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பரமேஸ்வர் கூறுகையில், “முதல்வர் பதவி குறித்த யதீந்திராவின் கருத்து தனிப்பட்டது. இந்த விவகாரத்தில் கட்சி மேலிடமே முடிவு எடுக்கும். கட்சி மேலிடம் அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருக்கிறது. அமைச்சரவை மறுசீரமைப்பு என்பது முதல்வரின் முடிவே,” என்றார்.

இதனிடையே, நேற்று சன்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் வி.சிவகங்கா கூறிய கருத்துக்கள் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன. முதல்வர் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கவும் காரணமாகி விட்டது. அவர் கூறியதாவது:

முதல்வர் பதவி ஒப்பந்தம் என்பது உண்மையே. சிவகுமார் என்ன சொன்னாலும் செய்வதற்கு, 40 முதல் 50 எம்.எல்.ஏ.,க்கள் தயாராக உள்ளனர். சிவகுமார் முதல்வராவதற்காக எனது எம்.எல்.ஏ., பதவியை தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன். அதற்காக என் உயிரையும் கொடுக்க தயார்.

சூசகம்

யதீந்திராவின் பேச்சை கண்டுகொள்ள தேவையில்லை. கட்சி மேலிடத்திற்கு எதிரான வகையில் கருத்து கூறியதற்காக, சமீபத்தில் அமைச்சரே பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எனவே, முதல்வர் பதவி விஷயத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அனைத்திற்கும் நாங்கள் தயார்.

இவ்வாறு கூறினார்.

பசவராஜ் கருத்துக்கள் சித்தராமையா தரப்பினருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளன. இதையடுத்து, மங்களூரில் நேற்று சிவகுமார் பேசியதாவது:

மக்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஊடகங்கள் என அனைவரும் நான் முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆனால், கட்சி மேலிடம் என்ன சொல்கிறது என்பதை பார்க்க வேண்டும். பரமேஸ்வர் முதல்வராக வேண்டும் என, அவரது தொண்டர்கள் விரும்புவதில் தவறில்லை.

பட்ஜெட்டுக்கு பிறகு முதல்வரா என்ற கேள்வி, என்னிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. இதற்கு காலம் தான் பதில் சொல்லும். யதீந்திராவுக்கு இன்னும் சிறிது நாட்களில் டில்லியில் இருந்து பதில் வரும்.

இவ்வாறு பேசினார்.

இதுபோன்ற கருத்துக்கள் கட்சிக்குள் குழப்பம் நீடிப்பதை அப்பட்டமாக எடுத்து காட்டுகின்றன. இவை அனைத்தையும் கட்சி மேலிடம் கண்டும், காணாமல் இருப்பது போல வேடிக்கை பார்க்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us