ADDED : ஜன 09, 2026 06:26 AM

பெங்களூரில் நடந்த கோகோ போட்டியில், கர்நாடகா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கர்நாடக அரசின் விளையாட்டு துறை, குஞ்சூர் கோக்கோ கிளப் சார்பில், 44வது தேசிய ஜூனியர் கோகோ விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம், 22ம் தேதி பெங்களூரில் துவங்கின.
கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், ஒடிசா உட்பட பல மாநிலங்களை சேர்ந்த, 33 அணிகள் போட்டியிட்டன. லீக், கால் இறுதி, அரையிறுதி போட்டிகள் முடிந்த நிலையில், பைனலுக்கு கர்நாடகா - மஹாராஷ்டிரா அணிகள் தகுதி பெற்றன.
நேற்று முன்தினம் பெங்களூரின் குஞ்சூரில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் விளையாட்டு மைதானத்தில் நடந்த கோகோ போட்டியில், மஹாராஷ்டிராவை, 35 - 30 என்ற கணக்கில் வீழ்த்தி கர்நாடகா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சிறப்பாக விளையாடியதற்காக கர்நாடக அணி வீரர்கள் விஜய்க்கு, வீர் அபிமன்யு விருதும், பிரஜ்வலுக்கு சிறந்த தற்காப்பு வீரர் விருதும் வழங்கப்பட்டது.
இதேபோல, பெண்கள் பிரிவில் நடந்த இறுதி போட்டியி ல், ஒடிஷா - மஹாராஷ்டிரா அணிகள் மோதின. இப்போட்டியில், 34 - 33 என்ற கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி, மஹாராஷ்டிரா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கோலாப்பூர், சென்ட்ரல் அணிகள் வெண்கல பதக்கங்களை வென்றன. சாம்பியன் பட்டம் வென்ற கர்நாடகா, மஹாராஷ்ரா அணிகளுக்கு போட்டியை நடத்தியவர்கள், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்
- நமது நிருபர் - .

