கேரளாவின் கொட்டியூர் சிவன் கோவிலில் கர்நாடக பக்தர்களுக்கு அவமதிப்பு
கேரளாவின் கொட்டியூர் சிவன் கோவிலில் கர்நாடக பக்தர்களுக்கு அவமதிப்பு
UPDATED : ஜூன் 10, 2026 12:12 PM
ADDED : ஜூன் 08, 2026 11:21 PM

- நமது நிருபர் -
கேரளாவின் கொட்டியூர் சிவன் கோவிலில், கர்நாடக பக்தர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொட்டியூரை புறக்கணிப்போம் என்ற, 'ஹேஸ்டேக்' உருவாக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் கண்ணுார் மாவட்டம், பவாலி ஆற்றங்கரையோரம், கொட்டியூர் மகாதேவர் கோவில் உள்ளது. 'தென்னகத்தின் காசி' என்று அழைக்கப்படும் இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு, சிவன் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.
இக்கோவிலில் நடை ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே, அதாவது மே - ஜூன் மாதங்களில் திறந்திருக்கும். அந்த நேரத்தில், 'வைசாக மஹோத்சவம்' நடப்பதால் இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.
ரிஷப் ஷெட்டி
கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் ரிஷப் ஷெட்டி இக்கோவிலுக்கு சென்று ஆண்டுதோறும் சாமி தரிசனம் செய்கிறார். ரீல்ஸ் வீடியோக்களும் வெளியாவதால், இந்த கோவிலுக்கு செல்ல மற்ற மாநில பக்தர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போது கோவில் நடை திறந்து இருப்பதால், கேரளாவின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவின் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, குடகு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தோரும், கொட்டியூர் கோவிலுக்கு செல்கின்றனர்.
டிக்கெட் மோசடி
இந்நிலையில் கொட்டியூர் கோவிலுக்கு சென்ற, கர்நாடக பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ: கன்னடர்கள் யாரும் தயவு செய்து கொட்டியூர் கோவிலுக்கு வர வேண்டாம். இங்கு நமக்கு மரியாதை கிடைப்பது இல்லை. சிவன் தரிசனத்திற்காக எட்டு முதல் பத்து மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. சாமியை தரிசனம் செய்ய விடாமல் இங்குள்ளவர்கள் தடுக்கின்றனர்.
மேலும், 1,000 ரூபாய் மதிப்பிலான வி.ஐ.பி., டிக்கெட்டிலும் மோசடி நடக்கிறது. பணம் செலுத்தினாலும் முறையாக தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. பெண்களை மோசமாக நடத்துகின்றனர். நெஞ்சில் கை வைத்து தள்ளுகின்றனர். காலால் தண்ணீரை இரைத்து முகத்தின் மீது அடிக்கின்றனர்.
கேரளாவில் இருந்து நமது மாநிலத்திற்கு வரும் பக்தர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையை இவர்கள் கொடுப்பது இல்லை. அவர்கள் பேசும் மலையாளமும் புரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
'ஹேஸ்டேக்'
மேலும் சில கன்னட பக்தர்கள் வெளியிட்ட வீடியோவில், 'கொட்டியூர் சிவன் கோவிலில், கன்னடர்களை வேண்டும் என்றே அவமதிக்கின்றனர். எங்களுக்கு மலையாளம் தெரியாது என்பதால் மோசமான வார்த்தைகளில் திட்டுகின்றனர். கன்னடர்கள் தயவு செய்து இங்கு வர வேண்டாம்' என்றனர்.
இந்த வீடியோக்கள் வைரலான நிலையில், கோவில் நிர்வாகம், கேரள அரசுக்கு எதிராக கன்னடர்கள் கருத்து பதிவிட ஆரம்பித்து உள்ளனர். சமூக வலைத்தளங்களில், 'கொட்டியூரை புறக்கணிப்போம்' என்று 'ஹேஸ்டேக்' உருவாக்கப்பட்டுள்ளது.
1.70 லட்சம் பேர்
இந்த பிரச்னை குறித்து கண்ணுார் டி.ஐ.ஜி., யதீஷ் சந்திரா கூறியதாவது: கொட்டியூர் கோவிலில் தினமும் 1.25 லட்சம் பக்தர்கள் தான் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் 7ம் தேதி 1.70 லட்சம் பக்தர்கள் வந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
கர்நாடகாவில் இருந்து வரும் பக்தர்களுக்கு தகவல் பற்றாக்குறை உள்ளது. அரை மணி நேரம் கோவில் கதவு சாத்தப்பட்டு சிலை சுத்தப்படுத்தப்படுகிறது. சிவாலி என்ற யானை மீது சாமி சிலை எடுத்து செல்லப்படுகிறது. இதனை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இனி எந்த பிரச்னையும் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடக பக்தர்கள் வசதிக்காக காசர்கோடு மாவட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும், கன்னடம் தெரிந்த 15 போலீஸ்காரர்களை பணியில் அமர்த்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
