கர்நாடகாவில் பஸ் கட்டணம் உயர்த்த அரசு திடீர் முடிவு
கர்நாடகாவில் பஸ் கட்டணம் உயர்த்த அரசு திடீர் முடிவு
ADDED : ஆக 16, 2026 03:08 AM

பெங்களூரு: ''எரிபொருள் விலை உயர்வால், நான்கு போக்குவரத்து கழங்களும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. எனவே, பஸ் டிக்கெட் கட்டண உயர்வு தவிர்க்க முடியாது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டணம் உயர்த்தப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்தார்.
கே.எஸ்.ஆர்.டி.சி., தலைமை அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:
பெட்ரோல் விலை ஒன்பது மடங்கிற்கு மேல் அதிகரித்த போதும், பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., - என்.டபிள்யூ.கே.ஆர்.டி.சி., - கே.கே.ஆர்.டி.சி., ஆகிய நான்கு போக்குவரத்து கழகங்களும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.
எனவே, பஸ் டிக்கெட் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கட்டணம் உயர்த்தப்படும்.
பஸ் கட்டண உயர்வு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அதுல் திவாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வால் ஏற்படும் சாதக, பாதகங்கள், நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை சமர்பிப்பார்.
இந்த அறிக்கை குறித்து முதல்வர் தலைமையில் அமைச்சரவையில் விவாதித்து, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டணம் உயர்த்தப்படும்.
எந்த காரணத்தை கொண்டும், மின்சார பஸ்கள் சேவை ரத்து செய்யப்படாது. முந்தைய அட்டவணைப்படி, மத்திய அரசிடம் இருந்து, 4,500 மின்சார பஸ்கள் கொள்முதல் செய்யப்படும். இது குறித்து இறுதி முடிவு அமைச்சரவையில் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
