/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மேகதாது திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு தீவிரம்!: 30 பேர் அடங்கிய குழு அமைத்து உத்தரவு
/
மேகதாது திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு தீவிரம்!: 30 பேர் அடங்கிய குழு அமைத்து உத்தரவு
மேகதாது திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு தீவிரம்!: 30 பேர் அடங்கிய குழு அமைத்து உத்தரவு
மேகதாது திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு தீவிரம்!: 30 பேர் அடங்கிய குழு அமைத்து உத்தரவு
ADDED : டிச 13, 2025 06:53 AM

மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில், கே.ஆர்.எஸ்., எனும் கிருஷ்ணராஜசாகர் அணை உள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள இந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் கர்நாடகா, தமிழக விவசாயிகளின் பாசனத்திற்கு உயிர்நாடியாக உள்ளது.
பெங்களூரின் குடிநீர் தேவையையும், கே.ஆர்.எஸ்., அணை நிறைவேற்றி வருகிறது. தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் கர்நாடகா, தமிழகம் இடையில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்யவும், இரு மாநிலங்களுக்கும் நியாயமான தண்ணீர் கிடைக்கவும் காவிரி மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழகம் எதிர்ப்பு இந்நிலையில், பெங்களூரு, பெங்களூரு தெற்கு மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக கனகபுரா அருகே, மேகதாது என்ற இடத்தில், புதிய அணை கட்ட, 2013 - 18ல் நடந்த காங்கிரஸ் ஆட்சியில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேகதாது அணை திட்டத்திற்கு, தமிழக அரசிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அணை கட்டினால் தங்களுக்கு காவிரி தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தமிழக விவசாயிகள் கூறி வருகின்றனர்.
ஆனால், 'மேகதாதுவில் அணை கட்டினால் எங்களை விட தமிழகத்திற்கே அதிக நன்மை' என்று, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் கூறி வருகின்றனர். மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 13ம் தேதி தள்ளுபடி செய்தது.
அதே நேரம், 'அணை கட்டும் விவகாரத்தில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணைய பரிந்துரைகள், கருத்துகளின் அடிப்படையில், மத்திய நீர்வள ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்' என்றும், உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது.
ஆராய்ச்சி மையம் இதையடுத்து, காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகளுடன், துணை முதல்வரும், நீர்ப்பாசன துறை அமைச்சருமான சிவகுமார், மேகதாது அணை திட்டம் குறித்து விவாதித்தார். 'மாண்டியா - பெங்களூரு தெற்கு மாவட்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், மேகதாது திட்டத்திற்கான தலைமை அலுவலகம் துவங்கப்படும்' என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, நீர்பாசனத்துறைக்கு உட்பட்ட கர்நாடக பொறியியல் ஆராய்ச்சி மைய இயக்குநர் கே.ஜி.மகேஷ் தலைமையில் குழு அமைத்து, அரசு நேற்று உத்தரவிட்டது.
ராம்நகரில் அலுவலகம் இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டு உள்ள உத்தரவு:
கடந்த நவம்பர் 18ம் தேதி, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் நடந்த மேகதாது அணை திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், திட்டத்தை விரைவாக செயல்படுத்த தலைமை இன்ஜினியர் அலுவலகம், கண்காணிப்பாளர், இன்ஜினியர்கள் அலுவலகங்கள் துவங்க முடிவு செய்யப்பட்டது.
புதிய அலுவலகம் அமைக்கவும், பணியிடங்களை நிரப்பவும் நிதித் துறை ஒப்புதல் தேவை. இதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால், இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, கர்நாடக பொறியியல் ஆராய்ச்சி மைய இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. திட்ட அலுவலகம், ராம்நகரில் துவங்கப்படும்.
இவரது தலைமையிலான குழு வில் நிர்வாக இன்ஜினியர் ஒருவர், மூன்று தொழில்நுட்ப உதவியாளர்கள், ஆறு உதவி இன்ஜினியர்கள், நிர்வாக அதிகாரி ஒருவர், கணக்கு கண்காணிப்பாளர் ஒருவர், முதல் வகுப்பு உதவியாளர்கள் இருவர், இரண்டாம் வகுப்பு கணக்கு உதவியாளர் ஒருவர், இரண்டாம் வகுப்பு உதவியாளர்கள் நான்கு பேர், ஸ்டெனோகிராபர் ஒருவர், தட்டச்சர்கள் நான்கு பேர், குரூப் டி ஊழியர்கள் இருவர், டிரை வர் ஒருவர், போலீஸ்காரர் ஒருவர் இருப்பர்.
உள்கட்டமைப்பு மேகதாது திட்ட அலுவலகம் கட்டுமான பணிக்கு காவிரி நீர்ப்பாசன கழகம் நடவடிக்கை எடுக்கும். அலுவலக பராமரிப்பு, உள்கட்டமைப்பு செலவுகளே அவர்கள் மேற்கொள்வர். திட்டத்தை செயல்படுவதற்கான அனைத்து ஆவணங்களையும் கர்நாடக பொறியியல் ஆராய்ச்சி மைய இயக்குநரிடம், காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி, மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது, தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

