/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜனநாயகத்திற்கு ஊழலால் அச்சுறுத்தல் கர்நாடக உயர் நீதிமன்றம் 'குட்டு'
/
ஜனநாயகத்திற்கு ஊழலால் அச்சுறுத்தல் கர்நாடக உயர் நீதிமன்றம் 'குட்டு'
ஜனநாயகத்திற்கு ஊழலால் அச்சுறுத்தல் கர்நாடக உயர் நீதிமன்றம் 'குட்டு'
ஜனநாயகத்திற்கு ஊழலால் அச்சுறுத்தல் கர்நாடக உயர் நீதிமன்றம் 'குட்டு'
ADDED : அக் 05, 2025 03:57 AM

பெங்களூரு: 'ஊழல் என்பது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகும். இது சட்டத்தின் ஆட்சியையே பலவீனப்படுத்துகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தங்கள் பொறுப்பை கருத்தில் கொண்டு நீதிமன்றங்கள் செல்பட வேண்டும்' என, கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
பாகல்கோட் மாவட்டம், பாதாமியின் கெலவாடி கிராமத்தில் கிராம கணக்காளராக பணியாற்றி வந்தவர் சிவனகவுடா வசந்த். 2011ம் ஆண்டு, அதே கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் ஹனமப்பா, தன் வருவாய் பதிவேடுகளை சரி செய்ய, சிவனகவுடா வசந்த்தை அணுகினார். பதிவேடுகளை சரி செய்ய, 2,500 ரூபாய் சிவனகவுடா வசந்த் லஞ்சம் கேட்டுள்ளார்; கொடுப்பதாக கூறிச் சென்ற விஜயகுமார், லோக் ஆயுக்தாவில் புகார் செய்தார்.
அவர்களின் ஆலோசனைப்படி, சிவனகவுடாவிடம் லஞ்ச பணம் வழங்கினார். அப்போது லோக் ஆயுக்தா போலீசார், சிவனகவுடா வசந்த்தை கையும், களவுமாக பிடித்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக, மாவட்ட கலெக்டர் சமர்ப்பித்த துறை ரீதியான விசாரணை அறிக்கையின் அடிப்படையில், 2020 அக்., 21ல் சிவனகவுடாவை பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்க அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, கே.ஏ.டி., எனும் கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்திடம் சிவனகவுடா முறையிட்டார். அரசின் உத்தரவுக்கு, கே.ஏ.டி., தடை விதித்தது.
இந்த தடைக்கு எதிராக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மாநில அரசு மேல்முறையீடு செய்தது. இம்மனு நீதிபதி சுனில் தத் யாதவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி கூறியதாவது:
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்களும், தீர்ப்பாயங்களும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஊழல் என்பது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாகும். இது, சட்டத்தின் ஆட்சியையே பலவீனப்படுத்துகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், தங்கள் பொறுப்பை கருத்தில் கொண்டு நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். சிவனகவுடா வசந்துக்கு கட்டாய ஓய்வு அளித்த அரசின் உத்தரவு சரியானது. எனவே, மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.