/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
யானைகள் எண்ணிக்கையில் கர்நாடகா முதலிடம்
/
யானைகள் எண்ணிக்கையில் கர்நாடகா முதலிடம்
ADDED : அக் 16, 2025 11:14 PM

பெங்களூரு: காட்டு யானைகள் எண்ணிக்கையில், நாட்டிலேயே கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது.
மத்திய சுற்றுச்சூழல் துறை, இந்திய வனவிலங்குகள் ஆணையம் ஒருங்கிணைந்து, யானைகள் கணக்கெடுப்பை நடத்தின. அக்டோபர் 14ல் அறிக்கை வெளியிடப்பட்டது. அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாட்டில் 26,645 காட்டு யானைகள் உள்ளன. அதிக யானைகளுடன் கர்நாடகா முதல் இடத்தில் உள்ளது. ஆனால் 2017ம் ஆண்டின் புள்ளி விபரங்களுடன் ஒப்பிட்டால், யானைகள எண்ணிக்கை குறைந்துள்ளது.
தென் மாநிலங்களில், அதிகமான யானைகள் வசிப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. கர்நாடகா, தமிழகம், கேரளா மாநிலங்களில் யானைகள் அதிகம் வசிக்கின்றன. கர்நாடகாவில் 6,013, தமிழகத்தில் 3,136, கேரளாவில் 2,785 யானைகள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில் யானைகளின் எண்ணிக்கை 11,934ஐ எட்டியுள்ளது.
ஆய்வுக்குழுவினர் 21,056 சாணம் மாதிரிகளை சேகரித்து, பரிசோதனை செய்து யானைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டனர். யானைகளின் மாதிரிகளை சேகரித்து, டி.என்.ஏ., பரிசோதனை செய்திருப்பது, இதுவே முதன் முறையாகும். இந்த அறிக்கை வருங்காலத்தில், யானைகளை கண்காணிக்கவும், கணக்கிடவும் உதவியாக இருக்கும்.
இதற்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி வாழ்ந்த யானைகள், இப்போது காபி, தேயிலை உட்பட, பல்வேறு விளைச்சல்களை பாழாக்குகின்றன.
விவசாய நிலத்தின் பரப்பளவு விரிவடைந்தது, வனப்பகுதிகளில் மக்களின் ஆக்கிரமிப்பு, மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட காரணங்களால், வனப்பகுதி குறைகிறது. காட்டை விட்டு யானைகள் வெளியே வர, இதுவும் காரணம்.
வனப்பகுதியை மக்கள் ஆக்கிரமிப்பதால், விலங்குகளின் இருப்பிடத்துக்கு அபாயம் ஏற்படுகிறது. வனப்பகுதிகளை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.