/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தந்தை அருகில் படுத்திருந்த ஆண் குழந்தை கடத்தல்
/
தந்தை அருகில் படுத்திருந்த ஆண் குழந்தை கடத்தல்
ADDED : மே 19, 2025 11:45 PM
சிவாஜிநகர் : நடைபாதையில் தந்தையின் பக்கத்தில் படுத்திருந்த, ஓராண்டு நான்கு மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டது. மூன்று நாட்களாகியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.
ராஜஸ்தானை சேர்ந்தவர் முகேஷ். இவர் பிழைப்பு தேடி, தன் மனைவி, 4 வயது மகள், ஓராண்டு 4 மாதமான மகனுடன் பெங்களூருக்கு வந்துள்ளார். சிவாஜிநகர் பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில், பலுான்கள் விற்று வருகிறார்.
தினமும் வியாபாரம் முடிந்த பின், பவுரிங் மருத்துவமனை வெளிப்புறம் உள்ள நடைபாதையில் உறங்குவது வழக்கம். இம்மாதம் 16ம் தேதியும், இங்கு படுத்திருந்தனர். இவர்களின் மகன் ரோஹித், தந்தையின் அருகில் படுத்திருந்தார். அதிகாலை 2:00 மணியளவில், முகேஷுக்கு விழிப்பு வந்து பார்த்த போது, குழந்தையை காணவில்லை. கலக்கமடைந்த அவர், பல இடங்களில் தேடியும் தென்படவில்லை.
அங்கிருந்த சிலர், உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறினர். அதன்பின் கமர்ஷியல் தெரு போலீஸ் நிலையத்துக்கு சென்று, புகார் அளித்தார். போலீசாரும் அங்கு வந்தனர். மருத்துவமனை உட்புறம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்த போது, பெண்ணொருவர் குழந்தை ரோஹித்தை துாக்கிக்கொண்டு செல்வது தெரிந்தது.
அப்பெண்ணை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மூன்று நாட்களாகியும், குழந்தையை பற்றிய எந்த தகவலும் தெரியாததால், பெற்றோர் கவலையில் உள்ளனர்.