அனுமதி இல்லாத இறைச்சி கடைகள் கோலார் கலெக்டர் எச்சரிக்கை
அனுமதி இல்லாத இறைச்சி கடைகள் கோலார் கலெக்டர் எச்சரிக்கை
ADDED : செப் 22, 2026 01:45 AM
கோலார்: ''அனுமதி பெறாமல் நடத்தப்படும் இறைச்சி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கோலார் நகராட்சியில், கலெக்டர் எம்.ஆர்.ரவிகுமார் எச்சரித்தார்.
கோலார் நகராட்சிக் கூட்டம், கலெக்டர் எம்.ஆர்.ரவிகுமார் தலைமையில் நேற்று நடந்தது. கோலார் நகர வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத்: யு.ஜி.டி., என்ற நிலத்தடி வடிகால் அமைக்க, 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 36 கி.மீ., துாரத்திற்கு திட்டமிடப்பட்டது.
ஆனால், அதை, 15 கி.மீ., துாரமாக குறைத்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகள் கருத்தை அறியாமல், அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இது, கண்டிக்கத்தக்கது.
கலெக்டர் ரவிகுமார்: இனி அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும். கோலார் நகரில் அங்கீகாரம் இல்லாத இறைச்சிக்கடைகள் இயங்குகின்றன.
சாக்கடைகள், ஏரிகள் என எங்கு வேண்டுமானாலும் செம்மறி ஆடு, கோழி கழிவுகள் கொட்டப்படுகின்றன.
இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எம்.எல்.ஏ., மஞ்சுநாத்: கோழிக்கறி, ஆட்டு இறைச்சியும் விற்கப்படுகின்றன. இதில் பெரும்பாலானோர் உரிமம் பெறவில்லை.
சுகாதாரத்தை கடைபிடிக்காமல் மக்களின் உடல் நலத்துடன் விளையாடுகின்றனர். மீன் விற்பனை கடைகளும் உரிமம் பெறவில்லை. இது போன்ற கடைகள் மூடப்பட வேண்டும். சட்ட விரோதமாக செயல்படும் போது ஏன், நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நேரடியாக வழக்கு பதிவு செய்யுங்கள்.
தீர்மானங்கள்: நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்; விடுபட்ட யு.ஜி.டி., பணி ஒப்பந்தப்புள்ளி குளறுபடி குறித்த விசாரணை நடத்துதல்; வளாகத்தில் துாய்மை கடைப்பிடிக்காவிட்டால் அபராதம் விதித்தல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
