/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குடிநீர் மாசுபடாமல் பார்த்து கொள்ள வேண்டும் அதிகாரிகளுக்கு கோலார் கலெக்டர் எச்சரிக்கை
/
குடிநீர் மாசுபடாமல் பார்த்து கொள்ள வேண்டும் அதிகாரிகளுக்கு கோலார் கலெக்டர் எச்சரிக்கை
குடிநீர் மாசுபடாமல் பார்த்து கொள்ள வேண்டும் அதிகாரிகளுக்கு கோலார் கலெக்டர் எச்சரிக்கை
குடிநீர் மாசுபடாமல் பார்த்து கொள்ள வேண்டும் அதிகாரிகளுக்கு கோலார் கலெக்டர் எச்சரிக்கை
ADDED : மார் 05, 2026 05:51 AM

கோலார்: ''பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். குடிநீர் தர பரிசோதனையில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கோலார் மாவட்ட கலெக்டர் எம். ஆர். ரவி எச்சரித்தார்.
கோலார் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில், குடிநீர் மற்றும் கோடைகால தயார் நிலை குறித்த மறு ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த, மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி பேசியதாவது:
பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் தண்ணீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட வேண்டும். குழாய்களில் ஏற்படும் கசிவு காரணமாக, குடிநீரில் கழிவு நீர் கலக்காமல் பார்த்துக் கொள்வது உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பு.
குடிநீர் தர பரிசோதனையில் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மேல்நிலை தொட்டிகளும், தொடர்ந்து குளோரினெட் மூலம் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
கோலார் மாவட்டத்தில் இயங்கும், தனியார் குடிநீர் நிலையங்கள் மற்றும் கேன் குடிநீர் வினியோகிக்கும் விற்பனையாளர்களை கண்காணிக்க, தாலுகா அளவிலான பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக தண்ணீர் விற்பனை செய்பவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். பொதுமக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
மாவட்டத்தில் மொத்தம் 1,239 கிராமங்கள் மற்றும் 118 நகர்புற பகுதிகளில் ஆர்.ஓ. பிளான்ட்கள் எனும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அவற்றில் பழுதடைந்த பிளான்ட்களை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
கோலார் மாவட்டத்தில், 176 கிராமங்களிலும், நகர்புறங்களில் உள்ள, 52 வார்டுகளிலும், அடுத்த மூன்று மாதங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால், உடனடியாக தண்ணீர் வழங்க மாவட்டத்தில், 70 தனியார் போர்வல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது பங்கார்பேட்டை, தங்கவயல், மாலுார் தாலுகாக்களில் மொத்தம், 11 கிராமங்களுக்கு வாடகை போர்வெல்கள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன் பி. பாகேவாடி, போலீஸ் டி.எஸ்.பி., ரவிசங்கர், கூடுதல் மாவட்ட கலெக்டர் எஸ்.எம். மங்களா, கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குநர் டாக்டர் ரமேஷ்.
மூத்த புவி ஆய்வாளர் திப்பேசாமி, நகர்ப்புற மேம்பாட்டு துறை திட்டமிடல் இயக்குநர் அம்பிகா, நகராட்சி ஆணையர் நவீன் சந்திரா, மாவட்ட குடும்ப நல அதிகாரி டாக்டர் சந்தன் குமார் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

