/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநில அரசியலுக்கு திரும்ப தயாராகும் குமாரசாமி
/
மாநில அரசியலுக்கு திரும்ப தயாராகும் குமாரசாமி
ADDED : ஜன 28, 2026 06:39 AM

முன்னாள் பிரதமர் தேவகவுடாவை, தேசிய தலைவராக கொண்டுள்ள கட்சி மதசார்பற்ற ஜனதா தளம். ஆனாலும், இக்கட்சிக்கு மாநிலம் முழுதும் கூடபெரிய அளவுக்கு செல்வாக்கு இல்லை. பழைய மைசூரு பகுதியான ராம்நகர், துமகூரு, மைசூரு, கோலார், சிக்கபல்லாபூர், ஹாசனில் மட்டுமே, ம.ஜ.த.,வுக்கு செல்வாக்கு உள்ளது.
அதிலும், ராம்நகர் ம.ஜ.த.,வின் கோட்டையாக இருந்தது. அங்குள்ள கனகபுராவை தவிர, ராம்நகர், சென்னப்பட்டணா, மாகடியில், ம.ஜ.த., தொடர்ந்து வெற்றி பெற்றது. ஆனால், 2023 சட்டசபை தேர்தலில், சென்னப்பட்டணாவில் மட்டுமே, ம.ஜ.த., வென்றது. மற்ற இடங்களை எல்லாம் காங்கிரஸ் கைப்பற்றியது.
சென்னப்பட்டணா எம்.எல்.ஏ.,வாக இருந்த குமாரசாமி, லோக்சபா தேர்தலில் மாண்டியாவில் வெற்றி பெற்று, மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சரானார். அதனால், சென்னப்பட்ட ணாவுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வென்றது. பல ஆண்டுகளுக்கு பின், ராம்நகர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளும் காங்கிரஸ் வசமாகின.
கர்நாடகா ம.ஜ. த., தலைவராக குமாரசாமி இருந்தாலும், அவர் தேசிய அரசியலுக்கு சென்று விட்டதால், கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில், அவரால் முழுதும் களம் இறங்க முடியவில்லை.
தேர்தலில், 'ஹாட்ரிக்' தோல்வி அடைந்த மகன் நிகிலை நம்பி, கட்சியை கொடுக்கவும் அவருக்கு மனமில்லை. தற்போது, பா.ஜ., கூட்டணியில் ம.ஜ.த., உள்ளது.
பழைய மைசூரில், பா.ஜ.,வுக்கு செல்வாக்கு கிடையாது. ம.ஜ.த., அலையை வைத்து, தங்கள் செல்வாக்கை பெருக்க பா.ஜ., முயற்சித்து வருகிறது. இது, தங்கள் கட்சிக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று உணர்ந்த குமாரசாமி, மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்ப தயாராகி வருகிறார்.
இதற்காக அடிக்கடி கர்நாடகா வரும் அவர், ராம்நகருக்கு சென்று தனது அரசியல் எதிரியான துணை முதல்வர் சிவகுமாருக்கு எதிராக பேசி வருகிறார். விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்திலும் பங்கேற்று வருகிறார்.
குமாரசாமி மாநில அரசியலுக்கு திரும்ப நினைக்கும் பின்னணியில், முதல்வராகும் ஆசையும் உள்ளது. ஏற்கனவே இரு முறை முதல்வராக இருந்த அவர், பதவி காலத்தை முழுமையாக முடிக்கவில்லை. வரும், 2028 தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு ஆதரவான அலை உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் நெருக்கமாக இருப்பதால், அவரிடம் பேசி எப்படியாவது பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணிக்கு முதல்வராகி விடலாம் என்று கணக்கு போட்டு உள்ளார் குமாரசாமி.
மீண்டும் முதல்வராவேன் என்று தனது ஆசையை அவர் வெளிப்படுத்தியும் உள்ளார். ஆனால், இதுபற்றி பா.ஜ., தலைவர்கள் கருத்து தெரிவிக்காமல் மவுனம் சாதிக்கின்றனர்.
- நமது நிருபர் -

