'நைஸ்' நிறுவனத்தை 'பினாமி' மூலம் முதல்வர் சிவகுமார் வாங்க போகிறார் ஆதாரம் இருக்கிறது என்கிறார் குமாரசாமி
'நைஸ்' நிறுவனத்தை 'பினாமி' மூலம் முதல்வர் சிவகுமார் வாங்க போகிறார் ஆதாரம் இருக்கிறது என்கிறார் குமாரசாமி
ADDED : ஆக 26, 2026 02:48 AM

- நமது நிருபர் -: ''முதல்வர் சிவகுமார், தன் 'பினாமி' மூலம் 'நைஸ்' நிறுவனத்தை வாங்க போகிறார். இதற்கான ஆதாரங்களை, அடுத்த வாரம் வெளியிடுவேன்,'' என, கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
முதல்வர் சிவகுமார் தன் பினாமி மூலம் நைஸ் நிறுவனத்தை வாங்க போகிறார். இது குறித்த ஆவணங்களை அடுத்த வாரம் வெளியிடுவேன். நைஸ் முறைகேட்டில் சிவகுமார் நேரடியாக ஈடுபட்டு உள்ளார். நாட்டில் நடந்த மிகப்பெரிய நில மோசடியின் முக்கிய சூத்திரதாரி சிவகுமார்.
அவர், விதான் சவுதாவில் உட்கார்ந்து கொண்டு ரியல் எஸ்டேட் செய்கிறார். நைஸ் நிறுவனத்துக்கும் சிவகுமாருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை, மக்கள் முன் வெளிச்சம் போட்டு காட்டுவேன்.
விவசாயிகளுக்கு ஒரு சட்டம், முதல்வருக்கு ஒரு சட்டம் என இருக்கிறதா... இது குறித்து, மாணவர்கள், விவசாயிகள், மாநில அரசை நோக்கி கேள்விகள் கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, ம.ஜ.த.,வின் சட்டசபை குழு தலைவர் சுரேஷ் பாபு தலைமையில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி.,க்கள் நேற்று தலைமை செயலர் ஷாலினியை சந்தித்தனர்.
அப்போது, 'நைஸ்' எனும் நந்தி உள்கட்டமைப்பு திட்ட ரோட்டில் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் மோசடி நடப்பதாக குற்றஞ்சாட்டினர். அந்த நிறுவனத்தை, மாநில அரசு உடனடியாக கைவசப்படுத்த வேண்டும் என, தலைமை செயலரிடம் மனு அளித்தனர்.
