/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தேனீக்கள் கொட்டியதால் 'கும்கி' யானை ஓட்டம்
/
தேனீக்கள் கொட்டியதால் 'கும்கி' யானை ஓட்டம்
ADDED : நவ 08, 2025 11:04 PM

சாம்ராஜ்நகர்: குண்டுலுபேட்டில் புலியை பிடிக்க வந்தபோது, தேனீக்கள் தாக்கியதால் வலி தாங்க முடியாமல், 'கும்கி' யானை நகர சாலைகளில் ஓடியது. மக்கள் பீதியடைந்தனர்.
சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட்டின் கள்ளஹள்ளி கிராமத்தில் புலியை பிடிக்க, யானைகள் முகாமில் இருந்து பார்த்தசாரதி என்ற 'கும்கி' யானை வரவழைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை வரை புலியை பிடிக்க முடியாததால், யானைக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அருகில் இருந்த ஏரியில் தண்ணீர் குடிக்க சென்றது.
அப்போது எங்கிருந்தோ வந்த தேனீக்கள், யானையையும், பாகனையும் கொட்டின.
வலி தாங்க முடியாத யானை, சாலைகளில் ஓடியது. யானை வேகமாக ஓடி வருவதை பார்த்த வாகன ஓட்டிகள், வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றனர். டவுன் பஸ் நிலையத்துக்குள் யானை வருவதை பார்த்த பயணியர், அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஆனால் யானை, அவர்களை எதுவும் செய்யவில்லை.
சிலர் பஸ்சுக்குள்ளும், சிலர் கட்டடங்களின் மாடிகளிலும் ஏறி தப்பினர். அங்கிருந்து வெளியே வந்த யானை, மதஹள்ளி சாலை வழியாக அஸ்வினி லே - அவுட், ஜே.எஸ்.எஸ்., நகர் வழியாக ஓடியது. தகவல் அறிந்த வனத்துறையினர், போலீசார் அங்கு விரைந்தனர்.
யானை வரும் வழியில் யாரும் நிற்க வேண்டாம் என்று அறிவித்தனர். வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர்.
யானை செல்லும் வழிகளில் யானை பாகன்கள் பின்னாலேயே சென்று அதை சமாதானப்படுத்த முயற்சித்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின், யானையை சமாதானப் படுத்தினர்.
'கும்கி' யானை ஓடி வருவதை பார்த்து, வாகனத்தை விட்டு ஓடிய வாகன ஓட்டி.

