ADDED : நவ 05, 2025 11:45 PM

பெங்களூரு - மைசூரு சாலையில், மாண்டியா மாவட்டம், பாண்டவபுராவில், தென்னை மரங்கள், கரும்பு தோட்டம், நெல் வயல்களுக்கு நடுவில் அமைந்துள்ளது குந்தி மலை. இரு பெரிய பாறைகள் கொண்ட இந்த மலை, மலையேற்ற பிரியர்களுக்கு ஏற்ற இடம். இது 2,882 அடி உயரம் கொண்டதாகும்.
இந்த மலையின் அடிவாரத்தில் ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி கோவில் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, விநாயகர், நந்தி விக்ரஹங்களும் உள்ளன. கோவில் அருகில், பெரிய தெப்பகுளமும் உள்ளது.
புராணங்கள்படி, பாண்டவர்கள் இம்மலையில் சில நாட்கள் தங்கியதாகவும், அப்போது பகாசூரனை பீமன் கொன்றதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பீமனின் கால்பாதம் இங்கு இன்னும் உள்ளது.
புராணத்தை உறுதிப்படுத்தும் வகையில், மலை உச்சியில் ஒரு சிறிய குளமும், பாத்திர வடிவ பாறைகளும், பாண்டவர்களின் தாய் குந்தியால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த குளம், 'குந்தி குளம்' என்றும் அழைக்கப்படுகிறது.
கடந்த 18ம் நுாற்றாண்டில், மைசூரை ஆண்ட திப்பு சுல்தான், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடுவதற்காக, பிரெஞ்சு படையினருக்காக, இம்மலையில் முகாமிட்டதாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே இம்மலையை 'பிரெஞ்சு பாறை' என்றும் கூறுகின்றனர்.
இம்மலையில் ஏற இருபுறமும் வழி உள்ளது. மலையின் அடிவாரத்தில் தொன்னுார் ஏரி அமைந்துள்ளது. ஏரிக்கரையில் அமர்ந்து 'கேம்ப் பயர்', உணவு தயாரித்து சாப்பிடலாம். டென்ட் அமைத்து ஓய்வெடுக்கலாம். ஏரியில், 'கயாக்கிங்' எனும் படகு சாகச விளையாட்டு விளையாடலாம். அக்டோபர் டூ மே மாதங்கள் இங்கு செல்ல உகந்த நேரம்.
- நமது நிருபர் -

