ADDED : செப் 02, 2026 11:02 PM

- நமது நிருபர் -
குதுரேமுக் மலைகளில், அபூர்வமான நீல குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. நீலம் மற்றும் ஊதா நிறங்களில் மலர்ந்துள்ள பூக்கள், சுற்றுலா பயணியரை வசீகரிக்கின்றன.
சிக்கமகளூரு மாவட்டத்தின், குதுரேமுக்கில் உள்ள மலைகள் இயற்கை எழில் மிகுந்தவை. கண்களுக்கும், மனதுக்கும் மகிழ்ச்சியை அளிக்கின்றன. அனைத்து காலங்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், நாடுகளின் சுற்றுலா பயணியருக்கு, குதுரேமுக் மிகவும் பிடித்தமான சுற்றுலா தலமாகும்.
மழைக்காலத்தில் குதுரேமுக், பூலோக சொர்க்கமாக காட்சியளிப்பது வழக்கம். வண்ணமயமான பூக்கள் வளர்ந்து, மலைகளின் அழகை மேலும் அதிகமாக்கும். குறிப்பாக, அபூர்வமாக பூக்கும் நீல குறிஞ்சி மலர்கள், பூத்து குலுங்கும். கடந்த, 2023ம் ஆண்டு குதுரேமுக் மலைப்பகுதிகளில், இந்த பூக்கள் அதிக அளவில் தென்பட்டன.
இப்போது குறைந்த அளவில், நீல நிற குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. ஊதா நிற பூக்களும் வளர்ந்துள்ளன. பச்சை நிற மலைகளுக்கு இடையே, ஆங்காங்கே மலர்ந்துள்ள நீலம், ஊதா நிற பூக்கள், குதுரேமுக்கின் இயற்கை அழகை பல மடங்காக அதிகரித்துள்ளன.
இங்கு வரும் சுற்றுலா பயணியர், செல்பி, போட்டோக்கள், வீடியோக்கள் பதி வு செய்து வெளியிடுகின்றனர். இதன் அழகால் ஈர்க்கப்பட்டு பலரும், குதுரேமுக்குக்கு வருகின்றனர்.
குதுரேமுக் தேசிய பூங்கா எல்லையில், டிரெக்கிங் பகுதிகள் உள்ளன. இங்குள்ள புல் விரிப்புகள், வனங்கள், அருவிகள், இயற்கை காட்சிகள் சுற்றுலா பயணியருக்கு, புதிய அனுபவத்தை அளிக்கின்றன. ஆர்வத்துடன் மலர்களுக்கு நடுவே நின்று போட்டோ எடுக்கின்றனர்.
பெங்களூரில் இருந்து, 323 கி.மீ., தொலைவில், சிக்கமகளூரில் இருந்து, 106 கி.மீ., தொலைவில் குதுரேமுக் உள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, குதுரேமுக்குக்கு அரசு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது.
சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நீல குறிஞ்சி மலர்கள், அழகான அபூர்வ மலர்களாகும். தற்போது குதுரேமுக்கின் மலைப்பகுதிகளில், பெருமளவில் வளர்ந்துள்ளன. இவற்றை காண வரும் சுற்றுலா பயணியர், பூக்களை பறிக்காமல், செடிகளை சேதப்படுத்தாமல், அதன் அழகை ரசிக்க வேண்டும். சுற்றுச்சூழலின் துாய்மையை காப்பாற்ற வேண்டும்.
குதுரேமுக் கர்நாடகாவின், மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்த இடத்தின் முக்கியத்துவம், அபூர்வமான நீல குறிஞ்சி பூக்களின் மகத்துவம் குறித்து, சுற்றுலா பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சுற்றுலாத்துறையின் பொறுப்பாகும்.
நீல குறிஞ்சி மலர்கள், இயற்கை கர்நாடகாவுக்கு அளித்த, மிகப்பெரிய பரிசாகும். இதை ரசிக்க வேண்டும். சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பில் சுற்றுலா பயணியருக்கும் பொறுப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: கலசா, ஹொரநாடு, சிருங்கேரி, ஹனுமன்குன்டி நீர் வீழ்ச்சி, கடம்பி நீர் வீழ்ச்சி, சிரிமனே நீர் வீழ்ச்சி, லக்யா அணை.
