இயற்கை காட்சிகளை காண செல்வோம் மின்சேரி நீர்வீழ்ச்சிக்கு!
இயற்கை காட்சிகளை காண செல்வோம் மின்சேரி நீர்வீழ்ச்சிக்கு!
ADDED : ஜூன் 03, 2026 10:51 PM

-நமது நிருபர் -
பல்லாரி மாவட்டம், சுரங்கத்தொழிலுக்கு பிரசித்தி பெற்றது. இங்கு சுரங்கங்கள் மட்டுமின்றி, மனதை மயக்கும் அழகான நீர் வீழ்ச்சியும் உள்ளது. இந்த நீர் வீழ்ச்சியை கண்டால், அங்கிருந்து திரும்பவே மனம் வராது. அற்புதமான இடமாகும்.
கர்நாடகாவின், பல்வேறு மாவட்டங்களில், கோடை மழை பெய்தது. இதனால் நீர் வீழ்ச்சிகளில், நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது மழைக்காலம் துவங்குகிறது. மழைக்காலத்தில் நீர்வீழ்ச்சிகளை காண்பது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதற்காகவே பலரும் மழைக்காலம் துவங்கினால், நீர் வீழ்ச்சிகளை தேடிச்செல்வர்.
சிக்கமகளூரு, மைசூரு, உத்தர கன்னடா, சிக்கபல்லாபூர் என, பல்வேறு மாவட்டங்களில் நீர் வீழ்ச்சிகள் உள்ளன. அதே போல, பல்லாரியிலும் நீர் வீழ்ச்சி உள்ளது. இதை மிஞ்சேரி மற்றும் மிஞ்சூரு நீர் வீழ்ச்சி என, அழைக்கின்றனர். மலையின் கற்பாறைகளின் மேலிருந்து, நீர் சளசளவென்ற சத்தத்தடன் கீழே பாய்கிறது. இதை ரசிக்க இரண்டு கண்கள் போதாது. சுற்றிலும் மலை, பசுமையான அடர்ந்த வனப்பகுதி நடுவே, நீர் வீழ்ச்சி அமைந்துள்ளது. இயற்கையை ரசிக்க, சிறந்த இடமாகும்.
ஆனால், மழை காலத்தில் மட்டுமே, இந்த நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பாயும். அப்போது மட்டுமே அழகைரசிக்க
முடியும். மற்ற நாட்களில் வற்றி விடும். மழை காலத்தில் தண்ணீர் காட்டாற்று வெள்ளமாக பாயும். பாறைகள் வழுக்கும். எனவே மிகுந்த எச்சரிக்கை அவசியம். அது மட்டுமின்றி நீர்வீழ்ச்சியில் திடீரென வெள்ளம் அதிகரிக்கும் சாத்தியங்களும் உள்ளன.
சிறார்களுடன் செல்லும் போது, அதிகமான கவனம் தேவை. சற்று தொலைவில் நின்று, இயற்கை காட்சிகள், மேலிருந்து தண்ணீர் பாயும் அழகை ரசித்துவிட்டு, பாதுகாப்பாக திரும்பி செல்வது நல்லது. அபாயத்தை தேடி கொள்ள வேண்டாம்.
