/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு துறைகளில் அதிகரித்த ஊழல் கண்டுபிடிக்க லோக் ஆயுக்தா குழு
/
அரசு துறைகளில் அதிகரித்த ஊழல் கண்டுபிடிக்க லோக் ஆயுக்தா குழு
அரசு துறைகளில் அதிகரித்த ஊழல் கண்டுபிடிக்க லோக் ஆயுக்தா குழு
அரசு துறைகளில் அதிகரித்த ஊழல் கண்டுபிடிக்க லோக் ஆயுக்தா குழு
ADDED : நவ 05, 2025 11:53 PM
பெங்களூரு: அரசின் பல்வேறு துறைகள் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு புகார்களை விசாரிக்கவும் துறைகளின் செயல்பாடுகளை கண்காணித்து ஊழல் அதிகாரிகளை கண்டுபிடிக்கவும் கர்நாடக லோக் ஆயுக்தா குழுக்களை அமைத்துள்ளது.
முந்தைய பா.ஜ., அரசில், 40 சதவீதம் கமிஷன் பெறுவதாக, அன்றைய எதிர்க்கட்சி காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இது, அடுத்து நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எதிரொலித்தது. பா.ஜ.,வின் தோல்விக்கு இது முக்கிய காரணமாக அமைந்தது.
அடுத்து ஆட்சி அமைத்த முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் மீதும் தற்போது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. காங்கிரஸ் அரசில், 60 சதவீத கமிஷன் வசூலிக்கப்படுவதாக, ஒப்பந்ததாரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சில அதிகாரிகள் வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்துள்ளதாக கர்நாடக லோக் ஆயுக்தாவுக்கு புகார்கள் பறந்துள்ளன. இதை தீவிரமாக கருதிய லோக் ஆயுக்தா, அரசின் அனைத்து துறைகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க துவங்கியுள்ளது.
ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி டி.எஸ்.பி.,க்களுக்கு, லோக் ஆயுக்தா கூடுதல் டி.ஜி.பி., மனீஷ் கர்பீகர், ஐ.ஜி.பி., சுப்ரமண்யேஸ்வர ராவ் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி பெங்களூரு நகரின் எஸ்.பி.,க்கள் வம்ஷி கிருஷ்ணா, சிவபிரகாஷ் தேவராஜு பொறுப்பில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினர் அந்தந்த துறையில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள், அதிகாரிகளின் வருவாய்க்கும் அதிகமான சொத்துக் குவிப்பு குறித்து தகவல் சேகரிக்கின்றனர்.
இதுகுறித்து, லோக் ஆயுக்தா அதிகாரிகள் கூறியதாவது:
அரசு துறைகளில் ஊழல் அதிகரித்துள்ளது. பல அதிகாரிகள் வருவாய்க்கும் அதிகமாக சொத்துகள் குவித்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. ஊழலை கட்டுப்படுத்த லோக் ஆயுக்தா நடவடிக்கை எடுத்துள்ளது. பணிகளை செய்யவே, அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.
சில துறைகளில் திட்டப் பணிகளுக்கு ஒப்பந்தம் அளிப்பதில், முறைகேடு நடப்பதாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின்றன. ஊழல்வாதிகளை கண்டுபிடிக்க, சிறப்பு குழுக்களை கர்நாடக லோக் ஆயுக்தா அமைத்துள்ளது. இதற்கு முன்பு தனித்தனி குழுக்கள் இருக்கவில்லை.
தகவல்தாரர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள், பொதுமக்களின் புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்குவர். ஆனால், இப்போது ஒவ்வொரு துறைக்கும், டி.எஸ்.பி., தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுப்பணித் துறை, மின்சாரம், நீர்ப்பாசனம், ஜி.பி.ஏ., கலால், பி.டி.ஏ., உட்பட, அனைத்து துறைகளுக்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழுவினர் அந்தந்த துறைகளை கண்காணிப்பர். மேம்பாட்டுப் பணிகளில் முறைகேடு நடந்திருப்பது தெரிந்தால், அதற்கான ஆதாரங்களை சேகரிக்க வேண்டும்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில், தாமாக புகார் பதிவு செய்து, விசாரணை நடத்தலாம். ஊழல் அதிகாரிகளின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்தும், அதிகாரிகள் சோதனை நடத்துவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

