/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த லோக் ஆயுக்தா 'மாஜி' போலீஸ்காரர் கைது
/
அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த லோக் ஆயுக்தா 'மாஜி' போலீஸ்காரர் கைது
அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த லோக் ஆயுக்தா 'மாஜி' போலீஸ்காரர் கைது
அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த லோக் ஆயுக்தா 'மாஜி' போலீஸ்காரர் கைது
ADDED : அக் 06, 2025 04:13 AM

ராம்நகர் : அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த, லோக் ஆயுக்தா முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு தெற்கு மாவட்டம், மாகடி குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் சுரேந்திரா. மாவட்ட அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மஞ்சுநாத். இவர்கள் இருவரின் மொபைல் போனுக்கு, சில தினங்களுக்கு முன்பு அழைப்பு வந்தது.
எதிர்முனையில் பேசிய நபர் தன்னை, ராம்நகர் லோக் ஆயுக்தா டி.எஸ்.பி., சிவபிரசாத் என்று அறிமுகம் செய்து கொண்டார்.
'நீங்கள் லஞ்சம் வாங்குவதாக நிறைய புகார் வருகிறது; உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க நான் கேட்கும் பணத்தை தர வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் சிறையில் இருந்து வெளியே வர முடியாதபடி, உங்கள் மீது நிறைய வழக்குகள் பதிவு செய்யப்படும்' என்று கூறி இணைப்பை துண்டித்தார்.
மொபைல் டவர் இதுகுறித்து சுரேந்திரா, மஞ்சுநாத் அளித்த புகாரில், ஐசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இவர்கள் இருவருக்கும் மிரட்டல் விடுத்தது, பெலகாவியின் சடலகாவியின் முருகப்பா நிங்கப்பா கும்பாரா, 60, என்பது தெரிந்தது.
மொபைல் போன் டவரை வைத்து விசாரித்த போது, மஹாராஷ்டிராவின் கோலாப்பூர் ஜெய்சிங்பூரில் அவர் பதுங்கி இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற ஐசூர் போலீசார், நேற்று முன்தினம் முருகப்பாவை கைது செய்தனர். அவரை, ஐசூருக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.
50 வழக்குகள் இதுகுறித்து எஸ்.பி., சீனிவாஸ் கவுடா நேற்று அளித்த பேட்டி:
ராம்நகர் லோக் ஆயுக்தா டி.எஸ்.பி., சிவபிரசாத் பெயரில், பல அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த, முருகப்பா நிங்கப்பா கும்பாரா கைது செய்யப்பட்டு உள்ளார்.
இவர், கர்நாடக போலீஸ் துறையில், 20 ஆண்டுகள் பணியாற்றியவர். மூன்று ஆண்டுகள் லோக் ஆயுக்தாவில் கான்ஸ்டபிளாக இருந்து உள்ளார்.
வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் வாரன்டை பணத்திற்காக தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில், பணிநீக்கம் செய்யப்பட்டவர்.
போலீஸ் வேலை பறிபோனதும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில், லோக் ஆயுக்தா டி.எஸ்.பி., பேசுவதாக கூறி, பல அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்து உள்ளார்.
ட்ரூ காலரில் தனது பெயரை லோக் ஆயுக்தா டி.எஸ்.பி., இன்ஸ் பெக்டர் என்று பதிவு செய்து வைத்திருந்தார். யாருக்காவது மொபைல் போனில் அழைக்கும் போது, ட்ரூ காலரில் லோக் ஆயுக்தா என்று அழைப்பு வந்ததால், அதிகாரிகள் உண்மை என்று நம்பி பணம் அனுப்பி உள்ளனர்.
அதிகாரிகளை மிரட்டி பறித்த பணத்தை வைத்து, வெளிநாட்டு மதுபானங்கள் வாங்கி குடிப்பார். பணம் தீர்ந்த பின், மீண்டும் அதிகாரிகளை மிரட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இவர் மீது, 15 மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கைதானவரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள், ஒன்பது சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.