ADDED : ஆக 26, 2026 11:00 PM

- நமது நிருபர் -
சுற்றுலா செல்வதற்கு அதிகமாக செலவாகும் என்ற காரணத்தாலே பலரும் சுற்றுலாவுக்கு செல்வதில்லை. இதற்காகவே, பட்ஜெட்டில் ஒரு சுற்றுலா தொகுப்பை கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் வழங்கி வருகிறது. வெறும் 600 ரூபாயில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள ககனசுகி, பரசுக்கி அருவிகளை கண்டு களிக்கலாம்.
இந்த சுற்றுலா சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் மட்டுமே செயல்படும். கே.எஸ்.ஆர்.டி.சி., இணையதளத்தில் முன்பதிவு செய்வது கட்டாயம். பெங்களூரு மைசூரு ரோடு சாட்டலைட் பஸ் நிலையத்திலிருந்து, காலை 6:30 மணிக்கு பஸ் புறப்படும். காலை 9:00 மணிக்கு மைசூரில் உள்ள ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலை அடையும்.
சிற்ப கலைக்கு பெயர் போன கோவிலில், சாமி தரிசனம் செய்து, படங்கள் எடுத்த பின் மீண்டும் பயணம் துவங்கும்.
காலை 11:00 மணிக்கு தலக்காடில் உள்ள பஞ்சலிங்கங்களை தரிசிக்கலாம்.
இதையடுத்து, தலக்காடில் பரிசல் சவாரி செய்யலாம். பின், மாலை 3:45 மணிக்கு மத்திய ரங்கநாத சுவாமி கோவிலில் தரிசனம்; மாலை 5:00 ககனசுகி மற்றும் பரசுக்கி இரண்டு அருவிகளையும் ஆசை தீர பார்த்து ரசிக்கலாம். பஸ் புறப்பட்டு இரவு 9:00 மணிக்கு பெங்களூரை வந்தடையும். இப்படி ஒரே நாளில் ஐந்து இடங்களை சுற்றிப்பார்க்கலாம். இந்த இரண்டு அருவிகளையும் பார்ப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இப்பயணத்தின் போது கையில் தேவையான அளவு பணம் எடுத்து செல்வது அவசியம். உணவு இடைவேளைகளுக்கு பஸ் நிறுத்தப்படும். ஒவ்வொரு இடத்தையும் நிதானமாக பார்த்து ரசிக்கும் அளவுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. பயணத்தின் போது குடை எடுத்து செல்வது சிறப்பு. சாட்டலைட் பஸ் நிலையத்திற்கு காலை 6:15 மணிக்கு செல்வதே சிறப்பு.
