நவீனமயமாகும் மெஜஸ்டிக் பஸ் நிலையம் ரூ.4,997 கோடியில் மேம்படுத்த ஒப்புதல்
நவீனமயமாகும் மெஜஸ்டிக் பஸ் நிலையம் ரூ.4,997 கோடியில் மேம்படுத்த ஒப்புதல்
ADDED : ஆக 01, 2026 06:40 AM
பெங்களூரு: மெஜஸ்டிக் பஸ் நிலையத்தை, 4,997 கோடி ரூபாய் செலவில், அதிநவீனமாக மேம்படுத்த, முதல்வர் சிவகுமார் தலைமையிலான, உயர் அதிகார கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.
பெங்களூரின் மெஜஸ்டிக் பகுதி மிகவும் பழமையானது. நகரின் முக்கியமான வர்த்தக பகுதியாகும். தினமும் மெஜஸ்டிக் பஸ் நிலையத்துக்கு, லட்சக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணியர் பெருமளவில் வருகின்றனர்.
இந்த பஸ் நிலையத்தை, உலகத்தரத்தில் மேம்படுத்த, போக்குவரத்து துறை ஆர்வம் காட்டுகிறது. இதற்காக, 4,997 கோடி ரூபாய் செலவில் திட்டம் வகுத்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து பரிசீலித்து, ஒப்புதல் அளிக்க முதல்வர் தலைமையில் உயர்மட்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
அரசு தலைமை செயலர் சாலினி ரஜ்னிஷ் தலைமையில், உயர்மட்ட கமிட்டி கூட்டம் நேற்று நடந்தது. இதில், 12,936.86 கோடி ரூபாய் செலவில், ஏழு முக்கிய திட்டங்கள் குறித்து, ஆலோசனை நடந்தது.
மெஜஸ்டிக் பஸ் நிலையத்தை, 4,997 கோடி ரூபாய் செலவில் நவீனமாக மாற்ற, ஒப்புதல் அளிக்கப்பட்டது. பயணியருக்கு சர்வதேச தரத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்படும்.
திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் நகர வளர்ச்சி துறைகளில், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மைசூரில், 729.43 கோடி ரூபாய் செலவில், 'பிலிம் சிட்டி' அமைப்பது, உத்தர கன்னடாவின், மாங்கி துறைமுகத்தில் 6,925 கோடி ரூபாய் செலவில், வளர்ச்சி திட்டங்கள் உட்பட பல திட்டங்களுக்கு நேற்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
