ADDED : மார் 05, 2026 05:31 AM

பறவைகள் என்றாலே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். பலரும் தங்களுக்கு பிடித்தமான பறவைகளை வீட்டில் வளர்க்கின்றனர். பறவைகள் சரணாலயத்தை தேடி செல்வோரும் உண்டு. யலபுர்காவில் உள்ள மாளக சமுத்ரா பறவைகள் சரணாலயம், சுற்றுலா பயணியருக்கு பிடித்தமானது.
கொப்பால் மாவட்டத்தில், பல்வேறு சுற்றுலா தலங்களும், அஞ்சனாத்ரி மலை, ஆனேகுந்தி போன்ற புண்ணிய ஸ்தலங்களும் உள்ளன. இங்குள்ள பறவைகள் சரணாலயமும், சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது. கொப்பாலின், யலபுர்கா தாலுகாவில் மாளக சமுத்ரா பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இயற்கை எழில் சூழ்ந்த அடர்த்தியான வனப்பகுதியில், 244 ஏக்கர் பரப்பளவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான விதவிதமான பறவைகள் அடைக்கலம் பெற்றுள்ளன. வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள், இன பெருக்கத்துக்காக இங்கு வருகின்றன. அரிய வகை பறவைகளையும் இங்கு காணலாம். சரணாலயத்தின் பெரிய ஏரியில், பறவைகள் கூட்டம், கூட்டமாக தென்படுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
புகைப்பட கலைஞர்களுக்கு தீனி போடும் காட்சிகளை இங்கு காணலாம். தினமும் அதிகாலை இங்கு வருவது நல்லது. மதியம், மாலை நேரத்தில் வெயில் இருப்பதால், பறவைகளை சரியாக காண முடியாது.
காதுகளில் இன்னிசையாக பாயும், பறவைகளின் ரீங்காரத்தை ரசித்தபடி, சரணாலயத்தை சுற்றி வருவது புதிய அனுபவமாக இருக்கும். தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் பறவைகள் சரணாலயத்துக்கு வருகின்றனர்.
ஆண்டு தேர்வுகள் முடிந்து, விரைவில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவங்கவுள்ளது. குடும்பத்துடன், நண்பர்களுடன் சுற்றுலா செல்ல திட்டம் இருந்தால், மாளக சமுத்ரா பறவைகள் சரணாலயத்தையும் சுற்றுலா பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள். குழந்தைகளை குஷியாக்கும் பல பறவைகள் இங்குள்ளன. மனதுக்கு அமைதியை தரும்.
சரணாலயத்தில் நீர் அருந்தும் பறவை
- நமது நிருபர் -

