மங்களூரு கே.எப்.சி., உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
மங்களூரு கே.எப்.சி., உணவகத்தில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
ADDED : ஆக 15, 2026 11:34 PM
தட்சிண கன்னடா: மங்களூரில் கே.எப்.சி., இறைச்சி உணவகத்தில் சோதனை நடத்திய உணவு பொது வினியோக துறையினர், கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரின் கே.எஸ்., ராவ் சாலையில் உள்ள கே.எப்.சி., எனும் அசைவ உணவகம் உள்ளது. இங்கு, ஒருவருக்கு, கெட்டுப்போன இறைச்சி விற்றதாகவும், அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி எடுத்ததாகவும், உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று காலை அதிகாரிகள், குறிப்பிட்ட கே.எப்.சி., உணவகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, சமையல் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட அறையில் சோதனை நடத்தினர்.
அங்கிருந்து, கோழி இறைச்சி கெட்டுப்போய் நாற்றம் வந்தது. அத்துடன், கோழியின் மூன்று மாதிரிகள், சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய் ஆகியவை மாதிரிக்கு எடுத்து, ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவர்களின் பதில் கடிதமும், ஆய்வக அறிக்கையும் கிடைத்த பின், அந்நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
